கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா



 நிறம் : வெள்ளை


வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 62: 1-5

இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25

நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25



திருப்பலி முன்னுரை 

    உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

         எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம். 

         காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போம். 

     பிறந்த இயேசுவை நம் மனங்களுக்குள் வரவேற்போம். அவர் நம் வாழ்வில் பிரகாசத்தை அருள்வார் என்பதை மனதில் ஏற்போம். பிறந்த பாலகன் அருளும் அமைதியும் மகிழ்ச்சியும் உலகில் எங்கும் கிடைக்க வரம் வேண்டுவோம். நம் வாழ்வை இறைவனோடு இணைந்து வாழ வரம் கேட்டு கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலியில் பங்கேற்போம். 




முதல் வாசக முன்னுரை 

    இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. சீயோனின் வெற்றியும், எருசலேமின் மகிழ்ச்சியும் இவ்வாசகத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நாம் காணும் வெற்றியும், மேன்மையும் இறைவன் நமக்கு தருபவை. குறித்த காலம் நிறைவேறும் போது இறைவன் நமக்கான நல்வரங்களையும் மகிழ்ச்சியையும் அருள்வார். அப்போது அவரது மேன்மையை உலகோர் அறிவர் என்கிறார் இறைவாக்கினர். ஆகவே வாசகத்தை கேட்கும் நாமும் நம் உள்ளங்களில் பிறந்த இயேசுவின் வழியில் நம் வாழ்வை அமைக்க வாசகத்தை வாழ்வாக்குவோம். 



இரண்டாம் வாசக முன்னுரை

      திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. இவ்வாசகம் திருத்தூதர் பவுல் அந்தியோக்கியா நகரில் திருச்சட்ட நூலை வாசித்து இயேசுவைப் பற்றி மக்களுக்கு கற்பித்ததை மையாக வைத்து அமைந்துள்ளது. கடவுள் தம் மக்களை தேர்ந்தெடுத்து, வழிநடத்தி, அவர்களை தம் தோள் வலிமையால் வழிநடத்தினார். குறித்த நேரத்தில் இயேசு என்னும மீட்பரை மக்களின் வாழ்க்கைக்கு கழுவாயாக அனுப்பினார். அவரது பிறப்பின் மகிழ்ச்சியினூடே நம் வாழ்வை சீரமைத்து வாழ வாசகத்திற்கு இதய கதவுகளை திறப்போம். 



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

 நாளை அவனியின் அநீதி அழிவுறும் உலகின் மீட்பர் நம்மீது அரசாள்வார். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. அன்பின் இறைவா! உலகில் மனிதராக பிறந்த உம்மை வரவேற்கும் நாங்கள் எங்கள் வாழ்வில் காணப்படும் தேவையற்ற எண்ணங்கள், கவலைகள், ஏற்றத்தாழ்வுகளை அகற்றி உமது வழியை பின்பற்றி வாழவும்; எதிர்நோக்கின் இறைவன் உம்மை எங்கும் பறைசாற்றி வாழவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. வலிமையை தருபவரே இறைவா! எம் வாழ்வில் நடக்கும் சிறு சிறு கவலைகளுக்காக உள்ளம் உடைந்து போகிறோம். அவற்றை உமது வலிமையால் வெற்றி கொள்ளவும் எம் வாழ்வை உமக்கு உகந்த வாழ்வாக வாழவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. பாலகனே இறைவா! உலகில் சிறுவர் சிறுமியருக்கு எதிராக நடைபெறும் அனைத்து குற்றங்களையும் நீரே கண்ணோக்கி அவர்களை பாதுகாத்து வழிநடத்தவும்; சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்து அவர்களை நாங்கள் பாதுகாக்கவும் எங்களுக்கு நல்மனம் தந்து வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. எம்மை கண்டித்து திருத்தும் பரமனே இறைவா! கண்டிக்கப்படுவதை விரும்பாத மனிதர்கள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் காண முடியாது என்பதை உணர்ந்து கண்டிப்பினை நாங்கள் ஏற்று, உம்மை பின்பற்றி உமது வாழ்வை பிறருக்கு பறைசாற்றும் வண்ணம் எங்கள் வாழ்வை அமைக்க வரமருள  உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நம்பிக்கையின் நாயகனே அன்பு இறைவா! உமது பிறப்பால் நாங்கள் புதுவாழ்வு பெறவும்; உம்மை பின்பற்றும் அனைவரும் உலகில் உமது மகிழ்ச்சியையும், சமாதானம் மற்றும் அன்பையும் பறைசாற்ற வரமருளும். உமது ஒளியில் எமது வாழ்வை அமைத்து எம்மை காத்து வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு