கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு


 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 66:18-21

இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12:5-7,11-13

நற்செய்தி வாசகம் : லூக்கா 13:22-30

திருப்பலி முன்னுரை

  தள்ளாடும் கால்களைத் திடப்படுத்தும் இறைவனது இல்லம் தேடி இறையருள் பெற்று செல்ல வந்துருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

  ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் நாம் நற்செய்தியில் இடுக்கமான வாயில் வழியாக பயணிப்பது குறித்து சிந்திக்க இருக்கிறோம். 

   இறைவன் தான் குறித்த நேரத்தில் குறித்த திட்டத்தை நிறைவேற்றுபவர். அவரது இறைத்திட்டம் என்றுமே நிலையானது, மாறாதது, மக்களுக்கு நன்மைபயப்பது. அவரது ஆட்சியின் பாதை மிகவும் குறுகலானது. அதனுள் நுழைய ஆண்டவர் அளிக்கும் பயிற்சியும் அவரது கண்டிப்பும் அவசியம். 

   வைரத்தின் பளபளப்பு அதன் பட்டைத்தீட்டப்படும் நேரத்தைப் பொறுத்தே அமையும். அவ்வண்ணமே ஆண்டவரின் கண்டிப்பு நம்மைப் பட்டைத்தீட்டி அவரது ஆட்சியில் பங்குபெற உதவும். அவரது கண்டிப்பு தள்ளாடும் கால்களை திடப்படுத்தி, நம்மை நேர்மையான பாதையில் வழிநடத்தி, இடுக்கமான வாயிலில் எளிதாக பயணிக்க உதவும். 

      ஆண்டவர் அளிக்கும் பயிற்சியும் அதுபோல நம்மை திடப்படுத்தும்.  அவரின் கனிவான வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகளாய் இறையாட்சியின் பாதையில் பயணிக்க நம்மை தயாரிப்போம். பயிற்சி கடுமையாக இருந்தால் பாதை சுலபமாக அமையும் என்பதை தெரிந்தோராய் ஆண்டவர் அளிக்கும் பயிற்சியையும் கண்டிப்பையும் ஏற்று இடுக்மான வாயில் வழியாக இறையாட்சியில் நுழைய வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசக முன்னுரை

 மக்களினத்தாருக்கு ஆண்டவர் வழங்கும் தீர்ப்பைக் குறித்து இறைவாக்கினர் எசாயா விவரிக்கிறார். ஆண்டவர் குறித்ததை நிறைவேற்றும் கடவுள். தம் மக்களுக்கு குறித்த நேரத்தில் தான் குறித்ததை நிறைவேற்றுபவர் என்கிறார் எசாயா. உலகம் உன்னை வெறுத்து ஒதுக்கினாலும் உன்மேல் மாறாத அன்பு கொண்டிருப்பவர் இறைவன் என்பதை விளக்குகிறார் இறைவாக்கினர். எனவே இவ்வாசகத்தை கேட்கும் நாமும் ஆண்டவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அவர் காட்டிய வழியில் பயணிக்க வாசகத்திற்கு மனதை திறப்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை

 ஆண்டவர் அளிக்கும் பயிற்சியை குறித்து திருத்தூதர் பவுல் எபிரேய மக்களுக்கு விளக்கும் வகையாக இவ்வாசகம் அமைகிறது. கண்டித்துத் திருத்தப்படும் குழந்தையும் கண்டிப்பை வாழ்வில் ஏற்றுக்கொள்ளும் குழந்தையும் பிற்காலத்தில் நலமான வாழ்வு வாழும் என கூறுகிறார் தூய பவுல். உளி தன்னை செதுக்க அனுமதிக்கும் கல்லே அழகான சிற்பமாகிறது, அதுபோல ஆண்டவரின் கண்டிப்பை ஏற்போர் நேர்மையான பாதையில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவான் 14:6

  வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. நம்பிக்கையின் நற்செய்தியே எம் இறைவா! நன்மையும் உண்மையும் என்றும் வெல்லும் என்பதை நாங்கள் உணர்ந்து, அவநம்பிக்கையின் பிடியில் சிக்கிய உலகிற்கு நற்செய்தியாக திகழவும், நேர்மறை எண்ணங்கள் கொண்டு நன்மையும் நீதியும் வெல்லும் என்ற நம்பிக்கையை என்றும் விதைக்க நல்மனம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இறையாட்சியை உருவாக்கியவரே அன்பு இறைவா! உமது ஆட்சி ஒருநாள் ஆட்சி அல்ல, அது அன்றாடம் எமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாழ்வு என்பதை நாங்கள் உணர்ந்து வாழவும், அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை விட்டு விலகாமல் என்றும் உமது ஆட்சிகேற்ற மக்களாக வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம். 
  3. அன்பின் இறைவா! பிறரால் நாங்கள் கவனிக்கப்படுகிறோம் என்பதற்காக எமது கடமைகளை செய்யாமல், யாரும் கவனியாத நேரத்திலும் கடமைகளை செய்பவர் சிறந்தவர் என்பதை உணர்ந்து செயல்படவும், மனநிறைவுடன் எமது மனச்சான்றின்படி செயல்பட்டு எமது கடமைகளை சரிவர செய்ய உமதருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 
  4. இறைவார்த்தை வழியாக எம்மோடு உறவாடும் இறைவா! உமது மாற்றம் தரும் இறைவார்த்தைகளை நாங்கள் உணரவும், புரிந்து கொள்ளவும் தேவையான ஞானத்தை தாரும், உமது வார்த்தைகள் வழியாக எம் வாழ்விலும் சமூகத்திலும் புதிய மாற்றத்தை உருவாக்க அருள்தர உம்மை மன்றாடுகின்றோம். 
  5. சமூகத்தின் மீதான பார்வையை விரிவுபடுத்தும் இறைவா! அநீதியை பார்த்து அமைதியாக இருப்பதும், பிறருக்காக பேச வேண்டிய இடங்களில் மௌனம் காப்பதும் தவறு என்பதை உணர்ந்து அவற்றை களையவும், சமூகத்தின் மீதான எமது பார்வையை விரிவாக்கி அநீதிக்காக போராடும் துணிவைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா