திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : ஊதா
வாசகங்கள்
முதல் வாசகம் : எசாயா 7: 10-14
இரண்டாம் வாசகம் : உரோமையர் 1: 1-7
நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 18-24
திருப்பலி முன்னுரை
திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்பின் ஞாயிறாகிய இன்று நாம் நம்மிடமும், பிறரிடமும் கொண்டுள்ள அன்பை சீர்தூக்கிப் பார்த்து செம்மைப்படுத்த நமக்கு ஆண்டவர் வழங்கும் வாய்ப்பை பெறுவோம். அன்பின் உயிர் வழியாய் அன்பை பிறருக்கு பகிர பிறக்கவிருக்கும் பாலகன் நமக்கு வாய்ப்பளிக்க இறைவனிடம் வேண்டுவோம்.
அன்பு ஆழமானது, அழகானது. அதை பிறரோடு பகிரும் போது பலமடங்கு பெருகி நம்மை உயர்நிலைக்கு எடுத்து செல்லும். ஆண்டவரின் தூதரிடம் உமது சொற்படியே எனக்கு ஆகட்டும் என்று தம்மை அர்ப்பணித்த அன்னை மரியின் பண்பும் அன்பின் வெளிப்பாடு தான். தம்மை வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்ற இறைமகனின் அன்பு வியப்புக்குரியது.
மீட்பரின் வருகைக்காக காத்திருக்கும் நாம் அன்பெனும் தீபத்தை மனதில் ஏற்றி இறைவனுக்காக காத்திருப்போம். காரிருளில் நடந்த மக்களுக்கு பேரொளியாக தோன்றவிருக்கும் மாபரனை அன்பால் வரவேற்போம். அவர் வழங்கும் புதுவாழ்வை பெறவும், பிற மனிதர்கள் மீது அன்பு கொள்வதன் வழியாக இறையன்பை உலகிற்கு பறைசாற்ற வரம் வேண்டி திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. ஆண்டவரின் வருகையை குறித்த அடையாளத்தை இறைவாக்கினர் முன்னறிவிக்கும் விதமாக இவ்வாசகம் அமைகிறது. ஆண்டவரை சோதிக்காமல் அவர் நமக்கு தரும் இன்ப துன்பங்களை முழுமனதுடன் ஏற்று அவரது வழியை பின்பற்றினால் நமது வாழ்வு அழகாகும். நமக்கு வாக்களித்ததை நிறைவேற்றும் கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்த வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. இறைமகன் இயேசுவைக் குறித்து திருத்தூதர் கூறியவற்றை பின்னணியாக கொண்டு இவ்வாசகம் அமைகிறது. தூய ஆவியால் பிறந்த அவர் இறைமகன் என்றும், மனிதர் என்ற முறையில் அவர் தாவீதின் வழிமரபினர் என்றும் திருத்தூதர் கூறுகிறார். ஒருவர் ஒருவரை அன்பு செய்ய பிறக்கவிருக்கும் பாலகனின் மகிழ்வின் செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்க வாசகத்திற்கு மனதை திறப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத்தேயு 1:23
இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது, "கடவுள் நம்முடன் இருக்கிறார்" எனப் பெயரிடுவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- எம்மை அன்பு செய்து வழிநடத்தும் இறைவா! எமது அயலாரோடு நாங்கள் அன்பு கொண்டு வாழவும், நீர் எம்மீது காண்பித்த அன்பை நாங்கள் எமது அயலாருக்கு கொடுக்கவும் அருள்புரியும். நிலையற்ற இவ்வுலகில் உமது அன்பை பெற்று பிறருக்கு முன்மாதிரியான வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- பணிவோடு வாழ எம்மை அழைத்த இறைவா! அன்னை மரியாவிடம் காணப்பட்ட தாழ்ச்சியும், பணிவும், பொறுமையும் எம் வாழ்வில் கடைபிடித்து நாங்கள் வாழவும்; உமது திட்டத்திற்கு எம்மை முழுதும் அர்ப்பணித்து வாழவும்; உமது நற்செய்தியை பிறருக்கு எடுத்துக் கூறவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- பிறரன்பில் உச்சம் கண்ட இறைவா! உடல் ஊனமுற்றோர், மன அழுத்தம் கொண்டோர், நோயாளிகள் ஆகிய அனைவரும் உடல், உள்ளம் நலம் பெற்று உம்மை புகழவும்; தங்கள் இயலாமையை நினைத்து வருந்தாமல் தங்களால் இயன்ற வகையில் வாழ்வை மகிழ்வாக்கவும், உமது பிறப்பின் செய்தி அவர்கள் வாழ்வை சீர்படுத்தி உமது அன்பில் அவர்கள் என்றும் நிலைபெற்று வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மை கண்டித்து திருத்தும் பரமனே இறைவா! குடி நோயால் தம்மையும் அழித்து தன் குடும்பத்தையும் தத்தளிக்கவிடும் மனிதர்களை உமது அன்பின் கனிவால் மீண்டும் உமது பராமரிப்பில் கொணர்ந்து அவர்கள் வாழ்வை சீர்படுத்தவும்; குடி நோயால் வாழ்வை இழந்த பலர் உமது பிறப்பால் புதுப்பிறப்பு பெற்று உமது வழியை பின்பற்றி வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மை வழிநடத்தும் இறைவா! அறிவையும் அனுபவத்தையும் விரிவாக்கும் கல்வி நிறுவனங்கள் தம் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு திறம்பட கற்பிக்கவும்; கல்விப் பணியை வியாபாரமாக பார்க்காமல் அதை சேவையாக எண்ணி மாணவர் நலம்பெற உழைக்க தேவையான சீர்மை எண்ணங்களைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen Amen
பதிலளிநீக்கு