கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு




 நிறம் : ஊதா

வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 2: 1-5

இரண்டாம் வாசகம் : உரோமையர் 13: 11-14

நற்செய்தி வாசகம் : மத்தேயு 24: 37-44



திருப்பலி முன்னுரை

       திருவருகைக்காலம் முதல் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் வாழ்த்துக்கள்.             

  ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம் அவரின் வருகைக்கு நம்மை தயாரிக்கும் காலம் திருவருகைக் காலம். பிறக்கவிருக்கும் பாலகன் இயேசுவை நம் உள்ளங்களில் தாங்க நம்மை மெருகேற்றும் காலம் இது. 

      மீட்பு நெருங்கி வந்துவிட்டது ஆகவே மனம்திரும்பி இறையாட்சிக்கு உட்படவும் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட இயேசு பிறப்பாகிய மகிழ்வின் செய்தி நமக்கும் தெரிவிக்கப்பட நம்மை தூய்மைப்படுத்த முற்படுவோம். ஆண்டவர் வரும் நேரமும் காலமும் நமக்கு தெரியாது. நாம் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ஆகவே அவரை வரவேற்க நாம் எப்போதும் தயாராக இருகக வேண்டும். 

       உலகில் சிறுமைபட்டோரை பேரினம் ஆக்கவும், பிறரால் புறந்தள்ளப்பட்டோரை அரவணைத்து ஏற்றுக்கொள்ளவும் மானிட மகன் மனித உரு கொண்டு இவ்வுலகிற்கு வந்தார். அவரை எதிர்கொள்ள நாமும் தீயவற்றை களைந்து தூய ஆவியின் செய்கைகளை கைகொள்ள வேண்டும். அப்போது தான் மீட்பு என்னும் விலைமதிப்பற்ற புதையலை நாம் பெற முடியும். 

          நம் தவறுகளை சரிசெய்து நம்மை சீர்படுத்தி ஆண்டவரின் வருகைக்கு நம்மை தயாரிக்க இந்த திருவருகைக் காலத்தை பயன்படுத்துவோம். என்றும் வாழும் இறைவன் நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பிறக்க இறையருள் வேண்டி இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.



முதல் வாசக முன்னுரை

   இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து அமைதியை பின்னணியாகக் கொண்டு முதல் வாசகம் அமைந்துள்ளது. போர்கள் இல்லா உலகை படைக்க இறைவன் எண்ணுகிறார் என்பதை தெளிவாக விளக்குகிறது இவ்வாசகம். அடுத்திருப்பவரோடு அமைதியுடன் வாழ்வதே உயரிய பண்பு என்பதை எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர். இயேசு கிறிஸ்துவின் வருகை நம்மில் அமைதியை ஏற்படுத்த வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம். 



இரண்டாம் வாசக முன்னுரை

   திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. ஆண்டவரின் வருகையையும் அப்போது நாம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இவ்வாசகம் விளக்குகிறது. ஆண்டவரின் வருகையின் போது அவருக்கு உகந்த செயல்பாடுகளை நாம் கொண்டிருக்க வேண்டும் என்றும் தீய செயல்களை விட்டகன்று நன்மையான செயல்களை கைக்கொண்டு வாழ வேண்டும் என்றும் கூறுகிறார் திருத்தூதர். இவ்வாசகத்தை கேட்கும் நாமும் ஆண்டவரின் வருகைக்காக நம்மை நன்முறையில் தயாரிக்க வாசகத்தை வாழ்வாக்குவோம். 



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திருப்பாடல்கள் 85:7

 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும் உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. உலகை படைத்து வழிநடத்தும் இறைவா! நீர் படைத்த இவ்வுலகம் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்று என்பதை நாங்கள் உணரவும், அனைத்து மொழி, இன, சமய மற்றும் நாடுகளும் இணையாக பயணிக்கவும், பெரும்பான்மை வாழ்வதும் சிறுபான்மை நலிவதும் மானுடத்திற்கு அழகில்லை என்பதை ஏற்று அனைவருக்கும் பொதுவான இணையான உலகம் உருவாக்க எமக்கு அருள்புரிய உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இறைபாதையில் பயணிக்க எம்மை அறிவுறுத்தும் இறைவா! நாங்கள் நடக்க வேண்டிய வழியை நாள்தோறும் எமக்கு அறுவுத்துகிறீர் ஆனால் நாங்கள் அவற்றை உணராமல் நடக்கக் கூடாத வழிகளில் எமது பயணத்தை தொடர்கிறோம் இவற்றை களைந்து உமது வழிகளை பின்பற்றி நாங்கள் பிறருக்கு முன்மாதிரியாக வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. சமத்துவ உலகம் படைக்க எம்மை அழைத்த இறைவா! நண்பர், எதிரி என்று பாராமல் அனைவரையும் ஒரு சேர பார்ப்பது மானுடத்தின் மாண்பு என்பதை நாங்கள் உணர்ந்து மானுடத்தை காக்கவும், மானுடம் மேம்பட எல்லாரையும் சமமாக மதித்து சமத்துவ உலகம் உருவாக வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. உமது வழியில் எம்மை வாழ பணித்த இறைவா! வாழ்வோரின் கடவுளாகிய நீர் எம்மை வாழ வைக்கின்றீர், வாழ்வு நிறைந்த இடத்தில் கடவுள் வாழ்கிறார் என்பதை மனதிற்கொண்டு இரக்கம் கொண்ட மக்களாக வாழவும், உமது வருகைக்காக எம்மை முழுமனதுடன் தயாரிக்கும் வரமருள உம்மை மன்றாடுகின்றோம். 
  5. மாசற்ற வாழ்வு வாழ பணித்த இறைவா! மாசுகள் நிறைந்த உலகில் மாசற்றோராய் வாழ்வது மிகவும் கடினமான செயல் என்றாலும் உமது உடனிருப்பு எம்மை முழுமையாக்கி உமக்கு உகந்த வாழ்வு வாழ எம்மை தகுதிபடுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்து மாசற்ற வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா