கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு


 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : மலாக்கி 4: 1-2

இரண்டாம் வாசகம் : 2 தெசலோனிக்கர் 3: 7-12

நற்செய்தி வாசகம் : லூக்கா 21: 5-19

திருப்பலி முன்னுரை

  பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு திருப்பலியில் இணைந்து ஆண்டவரின் இறையருள் வேண்டி இணைந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

      மனித உணர்வுகளை சாதகமாக்கி அதில் விளையாடும் விபரீத உலகில், இறைவன் இதோ சமீபத்தில் உள்ளார் என்று போலி இறைவாக்கினர்கள் உலவி வருகின்றனர். அவர்களின் வாக்குகளை கேட்காதபடிக்கு இறைவன் அவர்களுக்கு பதில் கொடுக்க நமக்கு வலிமை அளித்துள்ளார். 

         இறைவாக்கினர்களுக்கெல்லாம் பெரிய இறைவாக்கினரான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரவிருக்கும் தீங்கு பற்றி நற்செய்தியில் நம்மை எச்சரிக்கிறார். அச்சமயம் நாம் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதையும் தெளிவுற கூறுகிறார். உலகில் எது நடந்தாலும் நம் இறைவனின் கரம் நம்மை பாதுகாக்கும். 

                  ஆண்டவரின் நாள் வரும் போது இத்தகைய உழைக்க மனமில்லாத போலி இறைவாக்கினர்கள் தீர்ப்பிடப்படுவர். ஆணவக்காரர்கள், எளியோருக்கு கொடுமைகள் செய்வோர் ஆகிய அனைவரும் நியாய தீர்ப்புக்கு உள்ளாவர். இறைவனில் இணைந்து அவரது வழியை பின்பற்றும் எவரும் இறுதி தீர்ப்பு நாளில் அவர்பக்கம் இருப்பர். 

        மனவுறுதியும், நம்பிக்கையும், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும், அன்பும் நம்மிடம் என்றும் இருக்கவும், நம் அயலாரிடமும் எளியோரிடமும் பரிவு கொண்டு வாழவும், இறுதி நாளில் ஆண்டவரின் பக்கம் இருக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசக முன்னுரை

    இறைவாக்கினர் மலாக்கி ஆண்டவரின் நாள் குறித்து முன்னறிவித்ததை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. அணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் ஆண்டவரின் நாளில் தீர்ப்பிடப்படுவர்; மாறாக ஆண்டவரின் வழியில் நடப்போர் என்றும் அவரின் இறக்கைகளினால் பாதுகாப்பு பெறுவர் என்கிறார் இறைவாக்கினர். உலகமே நம்மை எதிர்த்திடினும் நம் ஆண்டவர் மீது நாம் கொண்டுள்ள மனவுறுதி என்றும் நிலைபெற்று நம்மை பாதுகாக்கும் என்பதை உணர்ந்தோராய் வாசகத்தை வாழ்வாக்குவோம். 



இரண்டாம் வாசக முன்னுரை

    திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. உழைப்பின் மேன்மையை பற்றி கூறும் திருத்தூதர், உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது என்று கூறுகிறார். தங்களிடையே சோம்பலின்றி உழைக்கும் எவரும் போற்றத்தக்கவர் என்றும் உழைப்பு ஒன்றே நம் மூலதனம் என்றும் விளக்குகிறார் திருத்தூதர். ஆகவே வாசகத்தை கேட்கும் நாமும் உழைக்கும் மனம் கொண்டு வாழ வாசகத்திற்கு மனதை திறப்போம். 



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக்கா 21:28

 நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள் ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. இறைவழியில் வாழ எம்மை அழைத்த இறைவா! உமது பாதையை விட்டு விலகாமல் உமது இறக்கைகளின் நிழலில் என்றும் நாங்கள் வாழ வரமருளும். உமது நாளில் நாங்கள் தீர்ப்பிடப்படாமல் இருக்க என்றும் மனவுறுதியும் நம்பிக்கையும் கொண்டோராய் உமது வழியில் வாழ வரமருள  உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உழைப்பின் மேன்மையை எமக்கு உணர்த்திய இறைவா! உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது என்பதை நாங்கள் உணர்ந்து செயல்படவும், நாங்கள் உழைப்பதற்கு எமக்கு தடையாக இருக்கும் அனைத்து காரணிகளையும் அகற்றி எம்மை உமது பராமரிப்பில் காத்து உழைக்கும் மனமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. வரப்போவதை முன்னறிவித்த எம் இறைவா! போலி இறைவாக்கினர், போலியாக இறைவாக்கு உரைப்போர் ஆகியோரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், வரவிருக்கும் உமது வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் நாங்கள் உமது வருகைக்கு எம்மை தயாரிக்க உமதருள் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. பேரன்புமிக்க பரம்பொருளே இறைவா! அனைவரையும் நேசிக்கும் உமது அன்பு ஆழமானது என்பதை நாங்கள் உணரவும், எம்மிடையே குடிநோய் மற்றும் பிற போதை பழக்கங்களால் அவதியுறும் அனைவரும் தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்து அவற்றை களையவும், உமது அன்பு அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்தோராய் உமது வழியில் பயணிக்க தேவையான வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இறைவார்த்தை வழியாக எம்முடன் பேசும் இறைவா! இறைவனின் வார்த்தைகள் மனதிற்கு இதம் அளிப்பவை, எம்மை நேரிய வழியில் வழிநடத்துபவை என்பதை நாங்கள் உணர்ந்து உமது வார்த்தைகளை தினமும் தியானிக்கவும், அதன் பொருள் உணர்ந்து எமது வாழ்வில் அவற்றை பயன்படுத்த உமதருள் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா