கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு


 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : சாலமோனின் ஞானம் 11: 22 - 12:2

இரண்டாம் வாசகம் : 2 தெசலோனிக்கர் 1: 11 - 2:2

நற்செய்தி வாசகம் : லூக்கா 19: 1-10



திருப்பலி முன்னுரை

   பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் இரக்கத்தை பெற குழுமியிருக்கும் அனைத்து இறை மக்களுக்கும் வாழ்த்துக்கள். 

          இறைவனின் இரக்கம் அளப்பரியது, ஆழமானது, அனைவருக்குமானது. இறைவனின் இரக்கத்தை இஸ்ரேல் மக்கள் பெற்றதால் கானான் நாட்டை கண்டனர். இவ்விரக்கமே நமக்காக சிலுவை மரணத்தை ஏற்க இறைமகனை பணித்தது. 

           உலகில் பல தலைவர்கள் வரலாம் போகலாம் என்றாலும் உன்னதர் இயேசுவின் வருகை அர்த்தமுள்ளது. அவரது இரண்டாம் வருகையில் நாம் அவருடன் வாழ இவ்வுலக வாழ்வை அர்த்தமுள்ள வகையில் வாழ வேண்டும். நமக்கு அடுத்திருக்கும் பிற மத சகோதர சகோதரிகளுக்கும், ஆதரவற்றோர், துயருறுவோர் அனைவருக்கும் நாம் இரக்கம் காட்ட வேண்டும். 

           இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் என்று மறைநூலில் வாசிக்கும் நாம் பிறருக்கு இரக்கம் காட்ட வேண்டும். நாம் பிறருக்கு காட்டும் இரக்கத்தின் வழியாக நம் ஆண்டவர் நமக்கு இரக்கத்தின் பலன்களை தருவார் என நம்புவோம். 

   இறைவனின் வருகையை எதிர்கொள்ள இறையாட்சியை முன்னறிவிப்போம். இறைவனுக்கு ஏற்புடைய மக்களாக வாழ பிறருக்கு முன்மாதிரியாகவும் அன்பான வாழ்வும் வாழ்வோம். இறைவனின் இரக்கத்தின் வழியாக அனைவரும் இறையரசில் நுழையும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசக முன்னுரை

    சாலமோனின் ஞானம் நூலில் கடவுளின் அருளிரக்கத்தை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. ஆண்டவர் உலகை படைத்தார், அவர் கண் முன்னே உலகம் தூசியாக கருதப்படினும் அவரது இரக்கம் மிகப்பெரியது. ஏனெனில் மனிதர்களாகிய நம் பாவங்களை அவர் மறந்து மன்னித்து நமக்கு பேரிரக்கம் காட்டுகிறார். என்றும் மாறாத நம் இறைவனின் இரக்கத்தை நமதாக்கி வாழ வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம். 



இரண்டாம் வாசக முன்னுரை

   திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் நியாய தீர்ப்பு பற்றியும் ஆண்டவரின் வருகையை பற்றியும் எடுத்துரைக்கிறார். கடவுளின் தீர்ப்பு நீதியானது என்றும் கூறுகிறார் திருத்தூதர். நம்மால் கிறிஸ்துவின் பெயருக்கும் அவரால் நமக்கும் மேன்மை கிடைக்கும் பொருட்டு இத்திருமுகம் படைக்கப்பட்டுள்ளது. ஆகவே வாசகத்தை கேட்கும் நாமும் இறைவனில் நிலைபெற்று அவரது இரக்கத்தை பெற வாசகத்தை வாழ்வாக்குவோம். 



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவான் 3:16

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1.  உலகை உருவாக்கிய இறைவா! நீர் உண்டாக்கிய இவ்வுலகை நாங்கள் பல்வேறு செயல்களால் மாசுபடுத்தி கொண்டிருக்கிறோம். இவ்வழகிய உலகம் நீர் வாழும் இல்லம் என்பதை நாங்கள் உணர்ந்து உமது படைப்பு அர்த்தமுள்ளது ஆனந்தமானது என்பதை மனதிற்கொண்டு இதை பாதுகாக்க நல்மனம் தந்தருள  உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இரக்கத்தின் மேன்மையை எமக்கு உரைத்த இறைவா! எமது அடுத்திருப்பவர்கள் இறைவனின் சாயல் என்பதை நாங்கள் உணர்ந்து அவர்களுக்கு இரக்கம் காட்டவும், பிறருக்கு இரக்கத்தோடு உதவுவது எமது வாழ்வை நிறைவடைய செய்யும் என்பதை எம் வாழ்வில் வெளிப்படுத்த நல்லுள்ளம் தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்பின் இறைவா! உமது வருகையை எதிர்பார்த்து உமக்காக காத்திருக்கும் எங்களை நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் இறையரசை எங்கும் பறைசாற்றவும் உமது வருகையில் உமக்கு பங்காளராக ஆக உமக்கு ஏற்புடைய வாழ்வை நாங்கள் வாழ எங்களுக்கு நிறையருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இழந்ததை தேடி மீட்க வந்த இறைவா! ஏழை எளியோர், கைவிடப்பட்டோர், அநாதைகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை நீரே கண்ணோக்கி பார்த்து அவர்களை காத்து உமது சிறகின் நிழலில் தாங்க வேண்டுமென்று  உம்மை மன்றாடுகின்றோம்.
  5. அனைவருக்கும் பாதுகாவலே எம் இறைவா! நோயுற்றோர், வறுமையில் தவிப்போர், கடன் தொல்லையில் உழல்வோர் ஆகிய அனைவருக்கும் நீரே உற்ற பாதுகாவலாக இருந்து அவர்களின் அனைத்து சுமைகளையும் களைய அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி காத்தருள உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா