ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம் : சீராக் 35: 12-14, 16-18
இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 4: 6-8, 16-18
நற்செய்தி வாசகம் : லூக்கா 18: 9-14
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறை விசுவாசத்தை காத்து இறைபாதையில் வாழ்வை அமைத்துக் கொள்ள வந்திருக்கும் இறைவனின் மக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
இறைமகன் இயேசு தன் தந்தையின் விருப்பத்தை தனதாக்கி தன்னை தாழ்த்தி இறைவிருப்பத்திற்கு தம்மை முழுமையாக கையளித்தார். இதனால் இன்று எப்பெயருக்கும் மேலான பெயரை கடவுள் தம் மகனுக்கு வழங்கினார்.
அறிவியலின் பரிணாமத்தில் வளர்ந்த உலகில் வாழும் நாம் எப்படி வாழ்கிறோம் என சிந்தனை செய்வோம். நான் தான் மெத்த படித்தவன், நான் தான் மேதாவி, எனக்கு அனைத்தும் தெரியும், என்னை வெல்பவர்கள் உலகில் இல்லை என்று பலர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி இறைவன் முன் தங்களை தாழ்த்த மறுக்கின்றனர்.
நம் இறைவன் அனைவருக்கும் பொதுவானவர்; நடுவுநிலை தவறாதவர். தம்மை இறைவன் முன் தாழ்த்தி முழுமையாக கையளிக்கும் எவரும் இறைவன் முன் உயர்வது திண்ணம். இதற்கு நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவும், அன்னை மரியும் சிறந்த உதாரணங்கள். அவரில் நம்மை கையளித்த விசுவாசத்தை கைக்கொண்டு நமது இலக்கை அடைய போராட்டத்தை துவங்குவோம்.
தம்மை தாழ்த்தி இறைவனிடம் முறையிடும் யாவருக்கும் இறைவன் நிறைபலன்களை அருள்வார். ஆகவே அனைவரையும் ஏற்கும் மனம் பெற்று நிறைவாக இறைவன் முன் வாழ தம்மை தாழ்த்தி இறைவனை நற்கருணை வடிவில் பெற்று ஆண்டவரோடு ஒன்றிணைய வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவரின் நீதியைப்பற்றி சீராக்கின் ஞான நூல் எடுத்துரைக்கிறது. ஆண்டவர் நடுவுநிலை தவறாதவர் என்றும் தம்மை இறைவன் முன் தாழ்த்துவோரின் வேண்டுதல்கள் முகில்களைத் தாண்டி ஆண்டவரை அடையும் என்றும் கூறுகிறது இவ்வாசகம். நம்மை தாழ்த்தி இறைவன் முன் நம்மை அர்ப்பணிக்கும் போது நமது வேண்டுதல்களை இறைவன் நிறைவேற்றுவார். ஆகவே வாசகத்தின் வழியாக இறைவனில் ஒன்றிணைய வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுலின் நிலைமையை திமொத்தேயு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இவ்வாசகம் அமைகிறது. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இறைவனால் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது விசுவாசத்தைக் காத்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்று வெற்றி காண்பதே நம் இலக்கு. நமது இலக்கை தெரிந்து கொண்டு இறைவனோடு பயணிக்க அவரில் ஒன்றிணைய வாசகத்தை வாழ்வாக்குவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரிந்தியர் 5:19க
கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- எம்மை வழிநடத்தும் இறைவா! எமது எண்ணங்களும் செயல்களும் பிறருக்கும் சமூகத்திற்கும் நற்பயன் தந்தால் மட்டுமே நாங்கள் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்க முடியும் என்பதை உணர்ந்தோராய் எமது எண்ணத்திலும் செயலிலும் உம்மை பிரதிபலிக்கும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- வேற்றுமைகளை களைந்து எம்மை ஒன்றித்து வாழ அழைத்த இறைவா! அடையாளங்களை பார்த்து மனிதர்களை பிறரிடம் இருந்து வேறுபடுத்தி நோக்குவது தவறானது என்பதை நாங்கள் உணரவும்; நாங்கள் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கை எம்மிடையே காணப்படும் அனைத்து வேறுபாடுகளையும் உடைத்தெறியும் ஆகவே நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் இணைந்து வாழ அருள் தாரும் இறைவா.
- சுதந்திர காற்றை சுவாசிக்க எம்மை வழிநடத்தும் இறைவா! இன்றைய உலகில் மனிதர்கள் ஏதோ ஒன்றிற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை இழந்து வருகின்றனர். இந்நிலை மாறி உமது பாதுகாப்பில் என்றும் சுதந்திரமாக வாழவும், அடிமை வாழ்வு இல்லா புதுவாழ்வை நாங்கள் வாழ எம்மை உமது பாதையில் வழிநடத்த உம்மை மன்றாடுகின்றோம்.
- விண்ணையும் மண்ணையும் இணைக்க திருவுளம் கொண்ட இறைவா! அழுகையும் துன்பமும் இல்லாத புதிய விண்ணகமும், புதிய மண்ணகமும் நீர் படைக்க விரும்புவது ஆகையால் உமது திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி மண்ணுலகை விண்ணுலகமாக மாற்ற வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நன்மைகளை செய்ய எம்மை பணித்த இறைவா! நற்செயல் புரிவதற்காகவே நாங்கள் உம்மால் இவ்வுலகிற்கு வந்துள்ளோம், நாங்கள் நற்செயல் புரியும் போது எமது படைப்பின் நோக்கம் நிறைவேறுகிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே எமது வாழ்நாள் எல்லாம் நன்மைகளை பிறருக்கு செய்யவும் நற்செயல் புரிந்து நல்வாழ்க்கை வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen
பதிலளிநீக்கு