கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு


 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : அபக்கூக்கு 1: 2-3, 2: 2-4

இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 1: 6-8, 13-14

நற்செய்தி வாசகம் : மத்தேயு 18: 1-5, 10


திருப்பலி முன்னுரை

  ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறைவனின் ஆசீர் பெற்று செல்ல வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

               விண்ணரசு அனைவருக்கும் பொதுவானது. ஆண்டவரின் திட்டப்படி அவரது அறிவுரைப்படி நடப்போர் விண்ணரசில் நுழைவது சுலபம். கடவுளின் மீட்பும் அனைத்து இனத்தாருக்கும் பொதுவானது. அவரது மீட்பைப் பெற்றுக்கொள்ளும் அனைவரும் விண்ணரசில் நுழைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

            சின்னஞ்சிறிய குழந்தைகளின் மனம் கபடற்றது. அனைத்தையும் அன்பால் ஏற்றுக்கொண்டு வாழும் உள்ளம் படைத்தோர் சிறியோர். குறைகள் கூற தெரியா உள்ளம் அவர்களுடையது. இத்தகைய சிறியோரின் உள்ளம் படைத்தோர் விண்ணரசில் நுழைவது மிக எளியது என்கிறார் இறைமகன். 

               விண்ணரசு இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல மாறாக அது இறைவனின் ஆட்சி, பாகுபாடற்ற ஆட்சி. அதில் நுழையும் பாதை குறுகலானது ஆகவே குழந்தை மனம் வேண்டும் என்கிறார் இறைவன். இன்றைய சூழலில் அனைவரையும் ஏற்றுக்கொண்டு பாகுபாடற்ற அன்பு காட்டி குழந்தை மனம் படைத்து நம்மிடையே வாழ்வோர் எத்தனை பேர் என்று சிந்தனை செய்வோம். 

                  விண்ணரசில் நுழைய நம்மை தகுதியாக்க நம் வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். உலகமே நம்மை வெறுத்தாலும் இறைவன் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்தோராய் இறைவனின் ஆட்சியில் நுழைய நம் வாழ்வை மாற்றி இறைபாதையில் வாழ்வை சீர்படுத்தும் வரம் கேட்டு திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசக முன்னுரை

    இறைவாக்கினர் அபக்கூக்கு ஆண்டவரிடம் முறையிடுவதை மையமாக வைத்து முதல் வாசகம் அமைந்துள்ளது. நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர் என்ற உயரிய உண்மையை வாசகம் வழியாக விளக்குகிறார் இறைவாக்கினர். நம்பிக்கையே ஒருவரின் சிறந்த துணை. இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை என்றும் நம்மை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்தும் என்பதை கூறும் வாசகத்தை நமதாக்க உள்ளங்களை திறந்து வாசகத்தை செவிமடுப்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை

 மக்களை நம்பிக்கையில் நிலைநிறுத்த தூய பவுல் திமொத்தேயுக்கு எழுதிய திருமுகத்தில் அறிவுறுத்துகிறார். கடவுள் நமக்கு வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தை வழங்கியுள்ளார் என்கிறார் திருத்தூதர். இயேசுவின் மீது முழுமையான நம்பிக்கையும் அன்பும் கொண்டு வாழ்வோருக்கு அவரது நற்செய்தி வெளிப்படும். ஆகவே இறைவனின் நற்செய்தியை நாம் காத்துக்கொள்ள வாசகத்திற்கு மனதை திறப்போம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேதுரு 1: 25

  நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. பகைவரையும் நேசிக்கும் அன்பு இறைவா! பிறர் வாழ வேண்டும் நாமும் வாழ வேண்டும் என்ற மனம் எம்மில் வளரவும்; பகைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்ற எண்ணம் எம்மிடையே நிலைபெற்று வாழவும், அனைவரும் நிலைவாழ்வு பெற்று விண்ணரசில் நுழைவதே மேலானது என்பதை நாங்கள் உணர்ந்து அனைவரையும் எம்மைப் போல் நேசிக்கும் மனம் எம்மில் வளர  உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பகிர்ந்து வாழ எம்மை அழைக்கும் எம் இறைவா! பகிர மறுப்பதும், பதுக்கி வாழ்வதும் நற்கருணை வாழ்வுக்கு எதிரானவை என்பதை நாங்கள் உணர்ந்து வாழவும், பிறருடன் பகிர்ந்து வாழும் போது இயேசுவின் இறையாட்சி கனவை மீண்டும் நிறைவேற்றுகிறோம் என்பதை எம் வாழ்வு வழியாக வாழ்ந்து காட்ட எமக்கு அருள்புரிய உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எமக்காக வாழ்வை தியாகமாக்கிய எம் இறைவா! எமது மீட்புக்காக சிலுவை சாவை ஏற்க துணிந்த உம்மை பின்பற்றும் நாங்கள் சமூக நலனுக்காக எம் நிலை துறந்து பிறருக்காக வாழவும், மேட்டிமை சிந்தனை, உயர்வு மனநிலை தவிர்த்து வாழவும்; எமது வாழ்வால் இயேசுவின் தியாகத்தை புனிதமாக்க உமதருள் பொழிய  உம்மை மன்றாடுகின்றோம்.
  4. வறியோரை தேற்றிய எம் இறைவா! ஏழையர் மாண்பு சிதைக்கப்படும் போது அறச்சீற்றம் கொண்டு நாங்கள் செயல்படவும்; வறியோரை ஆற்றுப்படுத்துவது படைத்தவருக்கு செய்யும் பிரதிபலன் என்பதை நாங்கள் உணர்ந்து செயல்படவும் அனைவரையும் மதித்து பிறரன்பு பேணும் சமூகமாக நாங்கள் மாற வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நேர்மையோடு எம்மை வாழ பணித்த இறைவா! வாழ்வில் நேர்மையோடு வாழ்ந்தால் அறம் தழைக்கும் என்பதை நாங்கள் உணரவும்; போலித்தனம் தவிர்த்து எமது வாழ்வில் உறவுகளில் உழைப்பில் நேர்மை பாராட்டி நேர்மையை கைக்கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா