ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம்: பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம்: ஆமோஸ் 6: 1, 3-7
இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 6: 11-16
நற்செய்தி வாசகம்: லூக்கா 16: 19-31
திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்.
நிலைவாழ்வு என்பது இறையாட்சிக்கு உட்பட்டு வாழ்வது. உண்மையான இறையரசை இம்மண்ணுலகில் கட்டி எழுப்புவதே நிலையானது. விண்ணக வாழ்வும் மண்ணக வாழ்வும் வெவ்வேறானவை. எனினும் இறையாட்சி என்ற இறைவனின் அரசை மண்ணுலகில் உருவாக்கும் போதுதான் நிறைவுபெற்ற இறையரசு உருவாகிறது.
இறையரசின் மதிப்பீடுகளை கடைபிடிக்கும் போது இம்மையிலும் மறுமையிலும் நிலைவாழ்வை பெறுவது நிதர்சனம். இத்தகைய மதிப்பீடுகளை கடைபிடிக்கும் பாதை கடினமாக இருப்பினும் அதன் நிறைவு என்றுமே சிறப்பாக அமையும். கடினமான பாதையை பின்பற்றும் அனைவரும் முடிவில் நிறைவான மகிழ்வில் வாழ்வர் என்பது அனைவரும் அறிந்ததே.
நிலைவாழ்வு என்னும் கொடை கிறிஸ்து இயேசுவின் வழியை பின்பற்றும் மக்கள் அனைவருக்கும் பொதுவானது. இது மீட்பின் தொடக்கமாக அமைவது. மீட்பின் வழியாக நிலைவாழ்வு என்னும் கொடையைப் பெற இறைவனின் வழியினின்று விலகாமல் வாழ வரம் வேண்டி நற்கருணை கொண்டாட்டத்தில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினர் ஆமோஸ் இஸ்ரேலின் அழிவு பற்றிய செய்தியை கூறுவதை மையமாகக் கொண்டு முதல் வாசகம் அமைந்துள்ளது. மனித வாழ்வு நன்மையும் தீமையும் நிறைந்தது. இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும் போது நம் வாழ்வு அழிவுக்கு உட்படாமல் என்றும் நன்மையில் நிலைத்திருக்கும். ஆகவே நம் வாழ்வை அழிவில் இருந்து காக்க இறைவனுக்கு ஏற்புடையவர்களாக நாம் மாறுதல் வேண்டும். இறைவனில் நம் வாழ்வும் இணைந்திருக்க வாசகத்திற்கு மனதை திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் கூறும் இறுதி அறிவுரைகளை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள விசுவாசத்தை கைக்கொண்டு வாழ வேண்டும். நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனவுறுதி கொண்டு என்றும் விசுவாச வாழ்வில் நிலைத்திருக்க திருத்தூதர் பணிக்கிறார். இவ்வாசகத்தை கேட்கும் நாமும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வாசகத்தை வாழ்வாக்குவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரிந்தியர் 8:9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- அன்பு தந்தையே இறைவா! எமது சமூகம் அன்பிற்காக ஏங்கும் சமூகம் என்பதை நாங்கள் உணர்ந்து பிறர் மீது அன்பும் கருணையும் கொண்டு வாழவும், நல்ல பெற்றோராய் என்றும் அன்பு செய்யவும், கரிசனை காட்டவும், உடன் பயணிக்கவும் நல்மனம் தந்த வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மை மனதார நேசிக்கும் அன்பு இறைவா! மனதார செய்யப்படும் செயல்கள் கடவுள் முன் அழகிய மாலையாகின்றன. நாங்கள் எமது செயல்கள் அனைத்தையும் நன்மைத்தனங்களோடு இயல்பாக முழு அக சுதந்திரத்தோடு மனதார செய்ய நல்மனம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- பெரியோர்களின் அறிவுரைப்படி வாழ்வை அமைத்த எம் இறைவா! பெரியோரை மதித்து, அவர் பேச்சுக்கு மரியாதை கொடுப்பவர் என்றும் நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து பெரியோரை மதித்து அவர்களது அறிவுரைகளை வாழ்க்கை பாடமாக மாற்ற அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- திருமணம் என்னும் அன்பின் அருட்சாதனத்தை எமக்காக உருவாக்கிய இறைவா! திருமணம் வழியாக ஒருவரை ஒருவர் நேசிக்கவும் மதிக்கவும் எமக்கு கற்றுத்தந்தீர், இந்த அன்பின் அருட்சாதனத்தில் இணைந்தோர் அந்த உறவில் என்றும் நீடிக்கவும், மணவிலக்கு பெறாமல் கடவுள் இணைத்த பிணைப்பை மனிதன் பிரிக்காதிருக்க உமது அருள் தந்து காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- குறிக்கோள் வகுத்து எம்மை வாழ பணித்த இறைவா! இலக்கில்லா பயணங்களால் எப்பயனும் இல்லை. குறிக்கோள் மனிதனை என்றும் நேர்வழிப்படுத்தும், குறிக்கோளை தன் வாழ்வில் கடைபிடிக்கும் மனிதர்கள் இயேசுவில் என்றும் வாழ்வர் என்பதை உணர்ந்து எம் குறிக்கோளை அடைய தினமும் உழைக்க வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen
பதிலளிநீக்குAmen
பதிலளிநீக்கு