கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு



 நிறம்: பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம்: ஆமோஸ் 8: 4-7

இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 2: 1-8

நற்செய்தி வாசகம்: லூக்கா 16: 1-13

திருப்பலி முன்னுரை

    ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு வழிபாட்டில் இணைந்து இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

          உலகில் கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. கடவுள் மக்களை ஒரே மாதிரியாக உருவாக்கினார். ஆனால் மனிதர்கள் கடவுளை புறக்கணித்து நேர்மையற்ற பாதையில் பயணித்தனர். எனினும் கடவுள் நம் மீது கொண்ட மிகுந்த பாசத்தால் தன் ஒரே மகனையும் நமக்காக கையளிக்க துணிந்தார். 

               கடவுளின் நேர்மை மனிதர்களை நேர்மையாக மாற்றும். சிறியவற்றில் நேர்மையாக இருப்பவர்கள் மிகப் பெரியவற்றிலும் நேர்மையாக இருப்பர். நேர்மையற்ற செல்வத்தை ஒருவர் திறமையாக கையாண்டால் நேர்மையான முறையில் சேர்க்கப்படும் செல்வத்தையும் திறமையாக கையாள்வார். 

      தனது பணியில் உண்மையும் நேர்மையும் கொண்டு செயல்படுபவர் என்றும் வாழ்வில் அமைதியும் அன்பும் பெருகும். நேர்மையான பாதையில் பயணிப்பது என்றுமே நிறைவைத் தரும். நமது வாழ்க்கை பயணத்தில் உறவுகளில் உண்மையும், நேர்மையும் மிளிர என்றும் இறைவனோடு இணைந்து பயணிக்கும் வரம் கேட்டு திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசக முன்னுரை

   இறைவாக்கினர் ஆமோஸ் நூலில் இருந்து முதல் வாசகம் அமைகிறது. இஸ்ரயேலின் வீழ்ச்சி பற்றி ஆமோஸ் இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். நேர்மையற்ற மனிதர்களாய் வாழ்வதை விட கடவுள் முன்னிலையில் நேர்மையாய் என்றும் பிறருக்காக உழைப்பவர்களாய் வாழ்வதே சிறந்தது என்கிறார் ஆமோஸ் இறைவாக்கினர். இறையேசுவின் மக்களாகிய நாம் என்றும் நேர்மையை முழுமையாக கைக்கொண்டு வாழ வாசகத்திற்கு உள்ளத்தை திறப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

    திருத்தூதர் பவுல் திமொத்தேயுக்கு கூறிய வழிபாட்டு அறிவுரைகளில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. மக்கள் எப்பொழுதும் இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய் வாழவும், அனைத்து மக்களுக்காக நாம் செபிக்கவும் வேண்டுமென வலியுறுத்துகிறார் திருத்தூதர். நம் இயேசுவின் தியாகத்தை எடுத்து கூறும் திருத்தூதர் அனைவருடனும் நேர்மையாக வாழ பணிக்கிறார். ஆகவே வாசகத்தை கேட்கும் நாமும் பிறருக்காக செபிக்கவும் என்றும் இறைவனில் இணைந்து வாழ வாசகத்தை வாழ்வாக்குவோம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரிந்தியர் 8:9

  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. பணிவு என்னும் பண்பில் சிறந்து விளங்கிய இறைவா! அதிகார நிலை விட்டு கீழிறங்கி சாமானிய எளியோரையும் நண்பர்களாக நாங்கள் மதிக்கவும்; வாழ்க்கை எங்களை மேலே உயர்த்தினாலும் நாங்கள் என்றும் பணிவு என்னும் பண்பில் சிறந்தோங்க உமதருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. நல்மனம் படைத்த அன்பு இறைவா! கிறிஸ்துவின் மனம் நம் மனமாக மாறினால் எங்கும் நன்மையும் உண்மையும் வாழும். சமத்துவமும் சகோதரத்துவமும் உலகில் வளரவும் வெறுப்பு கலாச்சாரம் நம்மிடையே மறையவும் கிறிஸ்துவின் மனதை நமதாக்கி நல்வாழ்வு வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நன்மைகளால் எம்மை நிரப்பும் இறைவா! நன்மை செயின் நல்லவை நம்மை அடையும் என்பதை நாங்கள் உணர்ந்து பணி செய்யவும், நாங்கள் செய்யும் செயல்களின் பலன் எங்களை அடையும் என்பதை உணர்ந்து எம் வாழ்வை நன்மைதனங்களால் நிரப்ப வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
  4. ஞானத்தின் பிறப்பிடமே இறைவா! ஞானம் பணிவின் உடன்பிறப்பு என்று நாங்கள் உணரவும், பணிவுடன் ஞானம் வளர்க்கவும், தற்பெருமை கொள்ளாது என்றும் பணிவு கொண்டு ஞானத்தோடு வாழ உம் அருள் வரம் பொழிந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நம்பிக்கையின் நாயகனே அன்பு இறைவா! நம்பிக்கை அனைத்து மக்களுக்கும் அவசியமானது. குடும்ப உறவுகள், சமூக பொறுப்புகள், தலைமைப்பண்பு அனைத்திற்கும் நம்பிக்கை மிகமிக தேவை என்பதை நாங்கள் உணர்ந்து என்றும் நம்பிக்கையுடன் எங்கள் உறவுகளைப் பேணிக்காக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா