ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம்: பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 32: 7-11, 13-14
இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 1: 12-17
நற்செய்தி வாசகம்: லூக்கா 15: 1-32
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
காணாமற் போனதை தேடி மீட்கவே மானிட மகன் வந்தார். தன்னிடம் இருப்பதை விட காணாமற் போனதை குறித்தே ஆண்டவர் மிகவும் வருந்துவார். காணாமற் போனது மீண்டும் கிடைத்தால் அதனால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இராது என்கிறது நற்செய்தி.
பாவிகளை மீட்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காணாமற் போனது கிடைக்கும் போது விண்ணகத்தில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். மனம்மாறிய பாவியைக் குறித்தும் பெரும் மகிழ்ச்சி விண்ணரசில் உருவாகும். கடவுளின் இரக்கத்தைப் பெற நம்பிக்கையோடு இருத்தல் அவசியம்.
ஆண்டவரின் திட்டத்தை விட்டு விலகாமல் என்றும் அவரது பாதையில் பயணிக்க வேண்டும். இறைநம்பிக்கை கடவுளின் இரக்கத்தை நமக்கு பெற்று தருவதோடு அவரது வழியில் நம்மை வழிநடத்தும். ஆகவே கடவுளின் இரக்கத்தைப் பெற்று என்றும் மனமகிழ்ச்சியோடு வாழ வரம் வேண்டி நற்கருணை கொண்டாட்டத்தில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
விடுதலை பயணம் நூலிலிருந்து முதல் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவரின் திட்டத்தை புறக்கணித்து தனக்கென ஒரு தெய்வத்தை உருவாக்கி வணங்கா கழுத்துள்ள மக்களாக இருந்த இஸ்ரேல் மக்களை குறித்து எடுத்து கூறுகிறது இவ்வாசகம். இறைவன் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் தான் வாக்களித்ததை நிறைவேற்றும் பொருட்டு இந்த வணங்கா கழுத்துள்ள மக்களை தண்டிக்காமல் விட்டுவிட்டார். ஆண்டவரின் வழியில் பயணித்தால் இறையாட்சிக்கு உட்படுவது எளிது என்பதை உணர்ந்தோராய் வாசகத்தை வாழ்வாக்குவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. கடவுளின் இரக்கத்தைப் பற்றி இவ்வாசகம் எடுத்து கூறுகிறது. பாவிகளை மீட்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்றும் நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் எனவும் இவ்வாசகம் கூறுகிறது. ஆண்டவரின் இரக்கத்தைப் பெற்று பிறருக்கு முன்மாதிரியான வாழ்வு வாழ வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரிந்தியர் 5: 19
கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரை தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- வாழ்வில் உண்மையாக வாழ வலியுறுத்தும் இறைவா! போலிப் புகழுரைகளை எண்ணி மனம் மகிழாமல், வாழ்வில் ஏமாறுவதும் பிறரை ஏமாற்றுவதும் தவறு என்பதை உணர்ந்து, உறவுகளில் உண்மையும் நேர்மையும் பேணி எமது வாழ்வை அர்த்தமுள்ள வகையில் இறைவழியில் அமைத்து கொள்ள வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- நன்மைதனங்களை எம்முடைய வாழ்வில் நிலைக்க செய்யும் இறைவா! முன்சார்பு எண்ணங்கள் எங்கள் மனதை தடுத்து பிறரைப் பற்றி தவறான எண்ணத்தை முன்வைக்கிறது. இதைக் களைந்து அனைத்து சமயம் மதத்தை சார்ந்த மக்கள் அனைவரும் உடன்பிறப்புகள் என்ற எண்ணம் எம்மில் மலர, முன்சார்பு எண்ணங்கள் மறைய வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- சீடராக வாழ அழைக்கும் இறைவா! நீர் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர். உமது சீடத்துவ வாழ்வை நாங்கள் பின்பற்றவும், காணாமல் போனவற்றை தேடி மீட்கவே மானிட மகன் வந்தார் என்பதை நாங்கள் உணர்ந்து, பிறரை மன்னித்து அவர்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு உமது சீடர்களாக வாழ தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நற்செயல்களின் வழியாக உலகை நிரப்பியவரே இறைவா! உலகம் வெறுப்பதையும் இழிவென கருதுவதையும் மாட்சிப்படுத்துவதே சிறந்த அருட்பணி என்பதை உலகுக்கு உணர்த்தியவர் நீர். உமது வழியை நாங்களும் பின்பற்றி உலகு வெறுப்பதை நாங்கள் நேசிக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களோடு உறவாடி இறையரசை உலகறிய செய்ய வரமருள உம்மை வேண்டுகிறேன்.
- சமத்துவத்தை வலியுறுத்தும் அன்பு இறைவா! பெரு நிறுவனங்கள் பெருந்திட்டங்கள் கோலோச்சும் இக்காலகட்டத்தில் சிறியவற்றையும் எளியவற்றையும் ஊக்கப்படுத்துவது அவசிய தேவை என்பதை நாங்கள் உணர்ந்து, எல்லோரையும் அன்பு செய்து எவரையும் தாழ்ந்தவராக எண்ணாமல் அனைவருடனும் சமத்துவம் பேணி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen
பதிலளிநீக்கு