ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம் : சாலமோனின் ஞானம் 18 : 6-9
இரண்டாம் வாசகம் : எபிரேயர் 11 : 1-2,8-19
நற்செய்தி வாசகம் : லூக்கா 12 : 32-48
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று இறையாசீர் பெற்றுச்செல்ல வந்திருக்கும் இறைமக்களை நெஞ்சார அன்புடன் வரவேற்கிறேன்.
ஒருவர் தனித்து நின்று அனைத்து அநீதிகளையும் கொடுமைகளையும் சந்தித்து வெல்வது நடைமுறை வாழ்வில் சிரமமானது. ஒருங்கிணைந்த இயக்க ஆற்றல் மட்டுமே ஒடுக்கும் அமைப்புகளை தகர்த்து புதிய சமுதாயம் படைக்கும்.
எனவே அனைவரும் ஒத்த கருத்துடன் இணைந்து, தங்களிடையே இணைப்பு பாலங்களை உருவாக்கி இயக்கமாக உருவாக வேண்டியது வரலாற்று தேவை. இதன்மூலம் உலகை மாற்றும் ஆற்றல் மிகுந்தவர்களாக நாம் மாற இயலும்.
இன்றைய உலகில் நாம் இணைந்து வாழ பல காரணிகள் தடையாக உள்ளன. விளம்பரம், நுகர்வு வெறி, திரைப்படம், சமூக வலைத்தளங்களில் தேடும் போலியான அங்கீகாரம், தன்னுடைய அடையாளத்திற்கான தேடல், போலியான முன்மாதிரிகள் போன்றவை மனிதர்களை தன்னுணர்வு பெற விடாமல் தடுக்கின்றன. இத்தகைய சூழலில் நாம் சமூகத்தின் அனைத்து தீங்குகளையும் சீர்தூக்கிப் பார்த்து அறச்சினம் கொண்டு விளிம்புநிலை மக்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.
சாதி, மதம், மொழி, இனம் கடந்து இணைந்து வருவதும், சமூக மாற்றுச் சிந்தனை கொண்ட மக்களோடு இணைந்து பயணிப்பதும், எல்லா மக்களையும், உள்ளடக்கிய செயல்பாடுகளை முன்னெடுப்பதும் உடனடி தேவை என்பதை உணர்வோம். அனைவரும் இணைந்து பயணிக்கும் வரம் கேட்டு திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்பதே உயரிய வாழ்வுக்கான நெறி என்பதை சாலமோனின் ஞானம் நூல் நமக்கு எடுத்துரைக்கிறது. நம்முடைய வாழ்வை வெறுமனே நகர்த்தி செல்லாமல், அது இறைவன் நமக்களித்த கொடை என்பதை உணர்வோம். ஆகவே நம் வாழ்வை இறைவனின் திட்டப்படி மகிழ்வாகவும் நிறைவாகவும் மிகவும் தெளிவான இலக்குகளோடும் வாழ உறுதியேற்போம். இவ்வழிகாட்டுதல்படி நம் வாழ்வை வாழ வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைகிறது. ஆபிரகாம், மோசே போன்ற நம்பிக்கை நிறைந்தோரின் வாழ்வு நமக்கு மாதிரியாக வைக்கப்படுகிறது. சிதைக்க முயலும் சோதனைகளுக்கு இடையே, நம்மை செதுக்கி உயர உதவும் உளிதான் நம்பிக்கை என்பதை உணர்வோம். நம்பிக்கையாளர்களாய் நாம் அனைவரும் இணைந்து வாழ உறுதியேற்று வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத்தேயு 24 : 42, 44
விழிப்பாயிருங்கள்! ஆயத்தமாயிருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- இயற்கையை நேசிக்கும் இறைவா! உமது படைப்பின் மேன்மையை நாங்கள் உணரவும், இயற்கையும் அதில் வாழும் உயிர்களையும் காக்கவும் நல்மனம் தாரும். இயற்கையை நாங்கள் காப்பதனால் எம் வாழ்வும் காக்கப்படும் என்பதை உணர்ந்து சமூகத்தின் ஆக்க சக்தியாக மாற, இயற்கையை பேணிக்காக்க வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- பணிசெய்ய அழைக்கும் இறைவா! உம் பணி செய்ய நீர் தேர்ந்து அழைத்த உம் மேய்ப்பர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்கள் தங்கள் பணியில் நிலைத்து பணிவாழ்வில் ஏற்படும் விரக்திகளை கடந்து உம் பணியாற்ற தேவையான அருள் வரங்களைப் பொழிந்து காத்திட உம்மை நோக்கி மன்றாடுகின்றோம்.
- வார்த்தையே உருவான இறைவா! உம் வார்த்தைகள் வழியாக எம்மை வழிநடத்தி எம் வாழ்வை சீர்படுத்தி காத்தருளும், நாங்கள் பிறருடன் பேசும் வார்த்தைகள் பிறரை வாழ்விப்பதாய் அமையவும், பிறருக்கு எம் வார்த்தைகள் வழியாக ஊக்கமூட்டி அவர்கள் வாழ்வு வளம்பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உலகை உருவாக்கியவரே எம் இறைவா! நீர் உருவாக்கி வளப்படுத்திய இவ்வுலகை நாங்களும் உருவாக்க எம்மை அழைக்கின்றீர் என்பதை நாங்கள் உணர்ந்து இந்த உலகை காக்கவும், உமது விருப்பத்திற்கேற்ப அழகிய, பயனுள்ள, எல்லா உயிர்களும் வாழத்தகுந்த புதிய உலகை நாங்களும் படைத்து பிறர்நலம் பேணும் வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- மனம் மாறி உம்மை பின்பற்ற அழைக்கும் இறைவா! கடவுளாகிய எம் இறைவன் எம் பாதைகளை, பார்வைகளை மாற்றி எம்மை திருத்தி நல்வாழ்வு வாழ வாழய்ப்பளிக்கின்றீர் என்பதை நாங்கள் உணர்ந்து எம் வாழ்வை சீர் செய்யவும், இறைமன்னிப்பு பெற்று என்றும் இறையன்பில் நிலைத்து நிறைவாழ்வு வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen 🙏
பதிலளிநீக்கு