கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு



 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : சபை உரையாளர் 1:2, 2:21-23

இரண்டாம் வாசகம் :கொலோசையர் 3:1-5, 9-11

நற்செய்தி வாசகம் : லூக்கா 12:13-21


திருப்பலி முன்னுரை

 பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க இறையில்லம் நாடி இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன். 

   நான் என்ற சுயம் அழிந்து நாம் என்ற பிறர்நலம் பிறக்கும் போது உலகம் தன்னலமற்றதாய் திகழும். இத்தகைய மனதுடன் வாழ்ந்து காட்டியவரே நம் இறைமகன் இயேசு. நமக்காக தன்னை அழித்து இரக்கத்தின் சிகரமாய் என்றும் நம் வாழ்வோடு பிண்ணிப்பிணைந்து உள்ளது அவர் வாழ்வு. 

   இன்றைய சமூகத்தில் பிறர் உழைப்பை சுரண்டும் உள்ளங்களும், அடுத்த தலைமுறையினருக்கு செல்வம் சேர்க்கும் மனங்களும், உலக இன்பங்களுக்கு அடிமையாகி கட்டுப்பாடுகளற்று வாழும் மனிதர்களும் நம்மிடையே ஏராளம். இதனை களைந்து உண்மையான மனிதத்துடன் வாழவே நம் இறைவன் நம்மை அழைக்கின்றார். 

  இவ்வுலக வாழ்வு நிலையற்றது. மெய்யான வாழ்வு விண்ணகத்தில் தான் இருக்கிறது என்பதை உணர்வோம். நிறை ஞானமும், மனித நேயமும், இரக்க குணமும், பிறர் நலம் பேணும் மனமுமே இறைவன் முன்னிலையில் நிலைத்த செல்வங்களாய் இருக்கின்றன என்பதை உணர்வோம். கடவுள் முன்னிலையில் விண்ணக வாழ்வை உரிமையாக்கும் செல்வங்களை சேமிக்க வரம் கேட்டு இத்திருப்பலியில் இணைவோம். 


முதல் வாசக முன்னுரை

   சபை உரையாளரின் அனுபவங்களை பின்னணியாகக் கொண்டு இவ்வாசகம் அமைகிறது. தாம் உழைப்பது வாழ்வை இன்பமாக வாழ்வதற்கே என்று எண்ணும் பலர் மத்தியில் நம் உழைப்பும் அதன் பயனும் நம்மை தொடர்ந்து வருபவர்க்கே விட்டுச்செல்லப்படுகிறது என்ற மேலான உண்மையை நமக்கு விளக்குகிறார் சபை உரையாளர். இதனால் அனைத்தையும் வீண் என்கிறார். உழைப்பின் பயனை தன் வாழ்வில் அடைபவர் இறைவன் அருள் பெற்றவரே என்று கூறும் வாசகத்தை கேட்கும் நாமும் ஞானத்துடன் உழைத்து வாழ வாசகத்தை வாழ்வாக்குவோம். 


இரண்டாம் வாசக முன்னுரை

    புதுப்பிக்கப்படும் மனித இயல்பை கொலோசை நகர மக்களுக்கு தூய பவுல் எடுத்துரைக்கிறார். மண்ணுலக வாழ்வை குறித்து எண்ணாமல் விண்ணுலக வாழ்வை குறித்து எண்ணி மனித வாழ்வை சீரமைப்பதே சாலச்சிறந்தது. ஆகவே உலக இன்பங்களை துறந்து, தேவையற்ற எண்ணங்களை கைவிட்டு இறைவனுக்கு உகந்த வாழ்வை வாழ அழைக்கிறார் திருத்தூதர் பவுல். ஆகவே இவ்வாசகத்தை கேட்கும் நாமும் நம் வாழ்வை சீரமைத்து இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ வாசகத்திற்கு செவிமடுப்போம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத்தேயு 5 : 3

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. இறைபாதையில் நடத்தும் பரமனே இறைவா! இறைத்திட்டம் என்றும் எங்கள் திட்டத்தை விட மேலானது என்பதை நாங்கள் உணரவும்; நேர்மையான மனம் கொண்டு உமது இரக்கத்தின் வழியில் பிறரன்பு பணி செய்து, உமது இறையாட்சியை எங்கும் பறைசாற்றும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பேரன்புமிக்க பரம்பொருளே இறைவா! பேரன்பு கொள்வதும், அன்பு கொடுப்பதும் பிறரன்பு பணியில் தன்னை இழக்க முன்வருவோருக்கே சாத்தியம் இதை உணர்ந்து எம் வாழ்வில் உமது பேரன்பை பிறருடன் பகிர்ந்து வாழவும், இறைமனித அன்பில் நிலைத்திருக்க உமதருள் வேண்டுகிறோம். 
  3. உலகை பாதுகாக்கும் இறைவா! தீமைகள் எங்கும் பரவியிருக்கும் இன்றைய சூழலில் தீமைகளை நாங்கள் துணிவுடன் எதிர்க்கும் ஆற்றலையும்; தீமை செய்வோரை கண்டு அஞ்சாமல் அனைத்தையும் உமது துணிச்சல் கொண்டு வாழ்வில் நன்மைதனங்களை செய்ய உமது அருளுதவி பொழிய உம்மை மன்றாடுகின்றோம். 
  4. உறவுகளின் நம்பிக்கையே இறைவா! உமது படைப்பாகிய மனிதர்கள் அனைவரும் உடன்பிறப்புகள் என்ற உணர்வுடன் நாங்கள் வாழவும், பிறரை புறக்கணியாமல் சகோதர அன்புடன் அனைவரும் இணைந்து பயணிக்கும் நல்மனம் தந்து வழிநடத்த மன்றாடுகின்றோம். 
  5. அன்பின் இறைவா! எங்கள் மனங்கள் நீர் வசிக்கும் கோயில் என்பதை நாங்கள் உணர்ந்து எம்மிடையே காணப்படும் வேற்றுமைகளை மறந்து, பிறரன்பு, மனிதநேயம், கரிசனை கொண்டு வாழவும், நாங்கள் வாழும் இடங்களை உமது அருள் தங்கும் கோயில்களாக மாற்ற வரமருள உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா