கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

 


நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : தொடக்க நூல் 18:20-32

இரண்டாம் வாசகம் : கொலோசையர் 2:12-14

நற்செய்தி வாசகம் : லூக்கா 11:1-13

திருப்பலி முன்னுரை

 "முண்டி மோதும் துணிவே இன்பம்; உயிரின் முதிர்ச்சியே வாழ்வின் மலர்ச்சி"  

இறையன்பில் வாழ்வின் அனுபவங்களை வாழ்க்கையாக்கி நிறைவாழ்வை பெற இறையில்லம் நாடி வந்திருப்போருக்கு வாழ்த்துக்கள். 

   மனிதராக பிறந்த அனைவரிடமும் காணப்படும் ஒன்று அன்பிற்கான ஏக்கம். ஒரு நீதிமான் இருந்தால் கூட இந்நகரை அழிக்க மாட்டேன் என்று கூரிய இறைவனும் நம்மிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். மேய்ப்பருக்கு காணாமல் போன ஒரு ஆடு கிடைத்ததே மகிழ்ச்சி. வழிதவறிய நம்மை நல்வழியில் வழிநடத்தவே இறைவன் உலகிற்கு வந்தார். 

  இறைவனில் இணைந்து பிறரை மன்னிக்கும் போது என்றும் நிறைவாழ்வு கிடைப்பது உறுதி. இறைவனிடம் அப்பா தந்தையே என்று மன்றாடினால் அவரது இரக்கம் என்றும் நம்மோடு இருக்கும். வாழ்வின் ஏக்கங்களான அன்பு, உறவாடுதல், பிணைப்பு அனைத்தும் இறை அனுபவத்தால் மனிதருக்கு கிடைப்பதே. 

  அனுபவங்களை வாழ்வாக கொண்ட மூத்த குடிமக்களின் விழாவை கொண்டாடும் நாமும் முதுமையின் இனிமையை உணர்வோம். அனுபவ ஏடுகளாய் நம்முடன் வாழும் நம் மூத்தோரின் வாழ்வின் வழியாக நம் வாழ்வு இறையருளில் நிலைத்திருக்க திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசக முன்னுரை

 முதல் வாசகம் சோதோமுக்காக ஆபிரகாம் மன்றாடுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வாழ்வோரின் கடவுள் வாழ்வுக்கான வாய்ப்புகளை நமக்கு தரக்கூடியவர். அவர் ஆபிரகாமின் வாழ்வுக்கான மன்றாட்டை கேட்டு அழிவிற்கான எண்ணத்தை கைவிட்டு என்றும் இரக்கமுள்ள இறைவனாக திகழ்கிறார். நம் நல்வாழ்விற்கான பரிந்துரைகளை இறைவன் என்றும் ஏற்று நடத்துவார் என்பதை மனதிற்கொண்டு வாசகத்தை வாசிக்க கேட்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்து இயேசுவால் வரும் நிறைவாழ்வு எவ்வாறு அமையும் என்பதை திருத்தூதர் பவுல் இவ்வாசகம் வழியாக கொலோசை நகர மக்களுக்கு எடுத்து கூறுகிறார். இறைவன் என்றும் இரக்கமும் அன்பும் கொண்டு நம்மை வழிநடத்துபவர். நாம் பாதை மாறினாலும் நம்மை நேர்வழிப்படுத்தி நம் வாழ்வை சீராக்குபவர். ஆகவே தவறுக்கான தண்டனையை விடுத்து வாழ்வுக்கான மன்னிப்பால் இறைவனின் நிறைவாழ்வை உரிமையாக்க வாசகத்திற்கு உள்ளங்களை திறப்போம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உரோமையர் 8 : 15

பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1.  அன்பின் இறைவா! நாட்டின் மக்களை அன்போடு வழிநடத்தவும், மக்கள்பால் அக்கறை கொண்டு அதிக வரி விதிக்காமல் மக்கள் மேல் பாராமுகமாய் இராமல் மக்கள் அனைவரையும் அரவணைத்து இணைந்து பயணிக்கும் நல்ல தலைவர்களை எமக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. சமூக நலன் பேணும் இறைவா! நாட்டைப்பற்றி சமூகத்தை பற்றி கரிசனையின்றி இருப்பது சுயநலம் என்பதை நாங்கள் உணர்ந்து பொதுநலம் பேணும் மனமும், தன்னை சுற்றியுள்ள பார்வையை உலகை நோக்கி திருப்புபவரால் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதை நாங்கள் உணர்ந்து சமூக நலம் பேணும் நல்லுள்ளம் தர உம்மை மன்றாடுகின்றோம்.
  3. வாழ்வை அழகுபடுத்தும் இறைவா! நினைவுகளே வாழ்வை அழகுபடுத்தினும், தேவையற்ற நினைவுகளை களைந்து; நல்லவற்றை, மகிழ்ச்சியின் தருணங்களை, நன்றியுணர்வுகளை நாங்கள் எங்கள் நினைவுகளில் வைத்து நினைவிலும், சொல்லிலும், செயலிலும் உம்மை பிரதிபலிக்க வரமருளும்.
  4. எளியவரை நேசிக்கும் இறைவா! ஏழை, எளியவர்களுக்கு நாங்கள் மனமிரங்கவும், அவர்களுக்கு கெடுதல் நினையாமல் என்றும் இரக்கத்தோடு இருக்கவும், ஏழையரின் உள்ளத்தோராய் இருந்து பிறரில் கடவுளைக் காண உமது அருள் தந்து எம்மை வழிநடத்த மன்றாடுகின்றோம். 
  5. அனைவரையும் காக்கும் இறைவா! அனுபவங்களை வாழ்வாக கொண்ட எம் பெற்றோர், பெரியோரை நாங்கள் மதிக்கவும், அவர்களை பாசத்தோடு பராமரிக்கவும் மனம் தரவும்; தற்போதுள்ள அவசர வாழ்வில் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களை மகிழ்வுடன் கவனித்துக்கொள்ள நல்மனம் தந்தருள உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா