கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு



 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : இணைச்சட்டம் 30:10-14

இரண்டாம் வாசகம் : கொலோசையர் 1:15-20

நற்செய்தி வாசகம் : லூக்கா 10:25-37

திருப்பலி முன்னுரை

  வார்த்தையான இறைவன் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்த வரம் வேண்டி பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு வழிபாட்டில் இணைந்து செபிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இறைவன் பெயரால் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன். 

   கடவுளின் வார்த்தைகள் உயிருள்ளது ஆற்றல் மிக்கது. அவரது வார்த்தைகளை கடைபிடித்து வாழ்வோரின் வாழ்க்கை எந்நிலையிலும் தடம் மாறாத கப்பல் போல குறித்த நேரத்தில் குறித்த இடத்தை சென்றடையும். அவ்வாறே நாம் திருச்சட்டத்திற்கு உட்பட்டு நடக்க ஏதுவான இரு பணிகளாவன; முழு மனத்தோடும் முழு உள்ளத்தோடும் இறைவனிடம் திரும்புவது மற்றும் நம்மை நாம் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது ஆகும். 

   இவற்றை நன்கு அறிந்து வாழ்வோர் இவ்வுலகில் மட்டுமல்லாது விண்ணக வாழ்வையும் தனதாக்கி கொள்வர். இதையே இன்றைய நல்ல சமாரியன் உவமை நமக்கு எடுத்துக் கூறுகிறது. நம்மை நேசிப்பது போல பிறரையும் அண்டை வீட்டாரையும் நேசிப்பது கடவுளின் மிகவும் இன்றியமையாத முதன்மையான கட்டளை. 

  இத்தகைய மேலான அன்பு மட்டுமே நம்மை என்றும் இறைவனோடு நிலைத்து வாழ வகைசெய்யும். இறைவார்த்தைப்படி வாழ்ந்து பிறரோடு நல்ல சமாரியனாக உறவாடுதல் தற்போது மிகவும் அவசியமான ஒன்று. இதை உணர்ந்து நம் வாழ்வை சீர்செய்து இறைவழியில் பயணிக்கும் வரம் வேண்டி இந்த நற்கருணை கொண்டாட்டத்தில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசக முன்னுரை

   மறுவாழ்வும் ஆசியும் பெறுவதற்கான வழிமுறைகளை முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது. ஆண்டவராகிய இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து அவரது வார்த்தைகளுக்கு செவிமடுத்தால் நாம் மேற்கொள்ளும் அனைத்து விதமான செயல்களிலும் நிறைவு பெறும்படி நமக்கு அருள்கூர்வார். அனைத்தையும் துறந்து முழுமையாக இறைவனிடம் திரும்பும் போது நிலைவாழ்வும் நீடித்த மகிழ்ச்சியும் நம்மில் பெருகும். இதை பின்பற்ற இறைவனின் வார்த்தை நமக்கு அருகிலேயேதான் இருக்கின்றது என்பதை உணர்ந்து இறைவனிடம் திரும்ப வாசகத்திற்கு செவிமடுப்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை

  கிறிஸ்துவின் மேன்மையை திருத்தூதர் பவுல் இவ்வாசகம் வழியாக கொலோசை மக்களுக்கு அழகுற எடுத்துரைக்கிறார். அனைத்து செயல்களுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் முதன்மை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவரே அனைவரையும் உருவாக்கி வழிநடத்தி பணிகளை பிரித்து கொடுக்கிறார். அவரின் வார்த்தைகள் வழியாக நமக்கு குறித்த திட்டத்தை நிறைவேற்றி அவரில் ஒப்புரவாகி ஒன்றிணைய வாசகத்தை கேட்டு வாழ்வாக்குவோம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவான் 6 : 63, 68

  ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. சமாதானத்தின் ஊற்றே எம் இறைவா! உலகில் நிலவும் அனைத்து விதமான போர்கள், கருத்து வேறுபாடுகள், ஒற்றுமை இன்மை, போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களிடையே காணப்படும் வேற்றுமைகளை மறந்து விட்டுக்கொடுத்து என்றும் மகிழ்வுடன் வாழ வரமருளும். 
  2. சிறுபிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள் அவர்களை தடுக்காதீர்கள் என்றுரைத்த இறைவா! எமது சிறுபிள்ளைகள் அனைவரையும் உமது ஆசீரைப் பொழிந்தருளும். அவர்கள் தங்கள் பெற்றோர், உற்றார், பெரியோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கீழ்படிந்து உமது அன்பின் வழியாக தங்கள் வாழ்வை வழிநடத்த தேவையான வரங்களை பொழிந்து காத்தருளும்.
  3. வார்த்தையின் வழிகாட்டியாம் அன்பு இறைவா! உமது இறைவார்த்தைகள் உயிருள்ளது; ஆற்றல் மிக்கது, பிறரை ஆற்றுப்படுத்த உதவுவது என்பதை நாங்கள் உணர்ந்து, உமது வார்த்தைகளை நாங்கள் தினமும் தியானித்து அதன்வழியாக மிகுந்த துணிச்சல் பெற்று என்றும் பிறருக்கு முன்மாதிரியான வாழ்வு வாழ வரம் அருளும்.
  4. அன்பின் இறைவா! நேரம் என்பது இறைவனின் கொடை என்பதை நாங்கள் உணர்ந்து எமக்கு நீர் கொடுத்த நேரத்தை நாங்கள் வீணான பொழுதுபோக்குகளில் செலவிடாமல், ஆக்கப்பூர்வமான சிறந்த செயல்களில் எங்களை ஈடுபடுத்தி எங்களது திறமைகள் ஆற்றல்களை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி எமது எதிர்கால வாழ்வை சீர்படுத்த உமது அருள் தந்து காக்க உம்மை வேண்டுகிறேன்.
  5. அன்பும் அருளும் கொண்டு எம்மை வழிநடத்தும் இறைவா! எங்கள் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து வாழ்வியல் சார்ந்த சிக்கல்களையும் உமது அருளின் துணையுடன் எதிர்த்து போரிடவும், தேவையில் இருப்போர், எமது அண்டை வீட்டார் ஆகியோருடன் உண்மையான அன்பின் வழியாக நட்பு பாராட்டவும், அனைவரையும் சமமாக கருதும் மனம் கொண்டு வாழ உமது அருளைப் பொழிந்து காக்க மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா