கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு


 நிறம் : சிவப்பு

வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 52 : 7-10

இரண்டாம் வாசகம் : எபேசியர் 2 : 19-22

நற்செய்தி வாசகம் : யோவான் 20 : 24-29

திருப்பலி முன்னுரை

  பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

      நாம் வாழும் உலகம் பலதரப்பட்ட மக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பல்வேறு இனம், மதம், மொழி, பண்பாடு என்று மாறுபட்டு வாழ்ந்திடினும் இறைவன் அருளும் மீட்பு அனைவருக்கும் பொதுவானது. பிற இனத்தார் மீதும் இறைமகன் இரக்கம் கொண்டவர் என்பதை அவரது வாழ்வின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடியும். 

    'யாரும் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்' ஆம்! அவ்வண்ணமே அவர் வழங்கும் மீட்பும் யாரும் நினையாத நேரத்தில் நிகழும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் அவரது மீட்பு திட்டம் நம்மில் நிறைவேறும்.அப்போது அவரது மீட்பில் பங்கேற்கும் நாம் அக்களித்து ஆர்ப்பரிப்பது உறுதி. 

      மாறாக இறைவனை கண்டால் மட்டுமே நம்புவோம் என்று இருத்தல் தவறு. ஏனெனில் இறைவனை காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். மேலும் பிற இனத்தாரையும் கிறிஸ்து இயேசுவின் உடலாகிய திருச்சபையோடு ஒன்றிணைக்கும் அற்புத வல்லமை இறைநம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. 

   ஆகவே நமக்கு அடுத்திருப்பவர்களிடம் அன்பு கொண்டு இறைநம்பிக்கையில் வளரும் போது மீட்பு திட்டத்தில் நாமும் பங்கேற்பது உறுதி என்பதை உணர்வோம். பிறரின் விழுப்புண்களை மீண்டும் மீண்டும் நிந்தனை செய்யாமல் தூய ஆவியின் துணையோடு அனைத்து இடர்களையும் வெற்றி கொண்டு, திருச்சபையை கட்டியெழுப்ப வரம் கேட்டு நற்கருணை பலியில் இணைந்து செபிப்போம். 

முதல் வாசக முன்னுரை

 எருசலேமின் மீட்பை பற்றி எசாயா இறைவாக்கினர் எடுத்துக் கூறுவதாக அமைகிறது இவ்வாசகம். மீட்பை பெற்ற மக்கள் இறைவன் முன் மகிழ்ந்து, ஆர்ப்பரித்து, அக்களிக்க அழைப்பு விடுக்கிறார் இறைவாக்கினர். ஆண்டவர் அருளும் ஆறுதலை பெற நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்றும் அவரது மீட்பை மண்ணுலகம் காணும் எனவும் கூறுகிறார் இறைவாக்கினர். நம்மை பழித்து இடித்துரைத்த மக்கள் முன் நம் மீட்பு ஆரவாரமாய் அமைய வாசத்திற்கு மனதை திறப்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை

 கிறிஸ்து அருளும் ஒற்றுமையை எபேசு நகர மக்களுக்கு எழுதிய மடல் வழியாக விளக்குகிறார் திருத்தூதர். தூய ஆவி மூலம் தந்தையுடன் ஒன்றிக்கப்பட்டு வாழ நம்மை அழைக்கிறார் திருத்தூதர். கிறிஸ்துவின் உறவில் நாம் திருச்சபையின் உறுப்புகளாகி அவரது உடலில் இணைந்திருப்பதே சிறப்பு. இதற்கு தூய ஆவியின் உடனிருப்பு மிகவும் அவசியம் என்பதை கூறுகிறது இவ்வாசகம். கிறிஸ்துவில் ஒன்றித்து இறையரசை கட்டியெழுப்ப வாசகத்தை வாழ்வாக்குவோம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவான் 20 : 29

நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. எம்மை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து என்னை பின்பற்றட்டும் என்றுரைத்த இறைவா! எமது பங்கின் வளர்ச்சிக்காகவும், அன்பிய வளர்ச்சிக்காகவும் உழைக்கும் மக்கள் தன்னலம் துறந்து, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அகற்றி பணியாற்றவும்; ஆயர் மாமன்றம், பங்கு மாமன்றம், குடும்ப மாமன்றத்தில் தன்னை இணைத்து குடும்பம் வளர்ச்சி காண உமதருள் தாரும்.
  2. எமக்கு பாதுகாப்பு வழங்கி எம்மை வழிநடத்தும் இறைவா! பெருகிவரும் கொரோனா தொற்றுநோய் பயத்தில் இருந்து மக்கள் விடுபடவும்; மீண்டும் மிகப்பெரிய தொற்றுநோய் பேரலை வராமல் மக்கள் அனைவரையும் பாதுகாக்கவும், மனத்திடமும் உடல் ஆரோக்கியமும் தந்து என்றென்றும் உமது சிறகுகள் நிழலில் எம்மை பாதுகாக்க உம்மை  கெஞ்சி மன்றாடுகின்றோம்.
  3. தியாகத்தின் நிறைவே  இறைவா! தமது தியாகத்தின் வழியாக எம்மை நல்வழிப்படுத்திய பெற்றோர், உற்றார் மற்றும் பெரியோருக்காக மன்றாடுகின்றோம். அவர்கள் தங்கள் வாழ்வில் மனநிறைவு காணவும், அவர்கள் துன்பத்திலும் இன்பத்திலும் உடனிருக்கவும், அவர்கள் அனுபவத்தின் வழியாக எம் வாழ்வை சீர்படுத்த வரம் தாரும்.
  4. அமைதியின் ஊற்றே எம் இறைவா! உலக நாடுகள் தங்களிடையே உள்ள விருப்பு, வெறுப்புகளை மறந்து போர்களை விடுத்து உலக சமாதான உணர்வுடன் விட்டு கொடுத்து ஒன்றிணைந்து வாழவும், மக்கள் நலனே முதன்மை என்ற உணர்வில் உலக தலைவர்கள் செயல்படவும் உமது மேலான இரக்கத்தைப் பொழிந்தருளும். 
  5. உலகை இயங்க செய்யும் இறைவா! விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கை உடனும் வாழ்வின் எந்நிலையிலும் வேலைக்காக பாடுபடும் அனைத்து தரப்பினரும் தங்கள் உழைப்புக்கு ஏற்ப சிறப்பான வேலைவாய்ப்பை பெற்று வாழ்வில் முன்னேற்றம் காணவும் அதன்வழி உம்மை பிறருக்கு எடுத்துரைக்கவும் வரம் தாரும். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா