கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு



 நிறம்: பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம்: 1 அரசர்கள் 19: 16, 19-21

இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 5: 1, 13-18

நற்செய்தி வாசகம்: லூக்கா 9: 51-62


திருப்பலி முன்னுரை 

  ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல ஆலயம் நோக்கி வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்து கூறி வரவேற்கிறேன். 

   தாய் வயிற்றில் இருக்கும் போதே இறைவன் நம்மை தெரிந்து கொண்டார். இறைவனின் அழைப்பு ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாய் அமையும். அந்த அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அழைக்கும் இறைவனின் பணி செய்ய எப்போதும் தயாராக இருப்பதே சாலச்சிறந்தது. 

         கலப்பையில் கைவைத்த பின் திரும்பி பார்ப்பதும், ஒரு செயலை செய்ய துணிந்த பின்பு பிறவற்றை குறித்து கலங்குவதும் தேவையற்றது என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கிறது. இதையே வள்ளுவமும்

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 

   எண்ணுவ தென்பது இழுக்கு" 

என்று குறிப்பிடுகிறது. ஆண்டவரின் திட்டம் என்றுமே சிறப்பு வாய்ந்தது. அவரிடம் மன்றாடி கேட்கும் போது அந்த திட்டம் நம்மில் நிறைவேறும் என்பது நிதர்சனம். அத்திட்டம் அழிவை அல்ல மாறாக மீட்பை வழங்கும் திட்டம். 

   ஆண்டவரை பின்பற்ற விரும்பும் எவரும் பிறவற்றை குறித்து அங்கலாய்ப்பு கொள்ள தேவையில்லை. ஏனெனில் படைத்த இறைவன் அனைத்தையும் செய்ய வல்லவர். இத்தகைய இறைவனின் திட்டத்திற்கு நம்மை கையளித்து இறைவன் அருளும் மீட்பும் வாழ்வும் பெற நற்கருணை பலியில் இணைவோம். 


முதல் வாசக முன்னுரை 

   எலிசா எவ்வாறு அழைக்கப்பட்டார் என்றும் அவரது தேர்வு பற்றியும் இவ்வாசகம் எடுத்துரைக்கிறது. எலிசா தான் தேர்ந்துகொள்ளப்பட்ட பின், தனக்கானது அனைத்தையும் தீயிட்டு எரித்து பின் எலியாவை பின்பற்றுகிறார். ஆண்டவர் எப்போது யாரை எதற்காக தேர்ந்தெடுக்கிறார் என்பதை நாம் அறியோம் எனினும் படைத்தவர் அறிவார். தமது திட்டத்தின்படி நமது வாழ்வை மெருகேற்றுவார். அவரின் அழைப்பு நம்மை இறையரசில் பங்குபெற செய்யும். அவரது உடனிருப்பின் வழியே இறை பாதையில் நம் வாழ்வை அமைக்க வாசகத்தை மனதில் ஏற்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை 

  கிறிஸ்தவரின்  உரிமை வாழ்வு பற்றி அழகுற எடுத்துரைக்கிறார் தூய பவுல். நமது அடிமை வாழ்வை அகற்றி உரிமை வாழ்வை வழங்கியவர் இறைவன். இந்த உரிமை வாழ்வை தக்கவைக்க ஊனியல்பின் செயல்களை கைவிட வேண்டும். தூய ஆவியார் அருளும் கனிகள், கொடைகளோடு அவரது உடனிருப்பின் வழியாக திருசட்டத்திற்கு உட்பட முயலுதல் அவசியம். தூய ஆவியின் செயல்பாடுகளை பின்பற்றி உண்மை கிறிஸ்தவ உரிமை வாழ்வைப் கைகொள்ள வாசகத்திற்கு உள்ள கதவுகளைத் திறப்போம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

1 சாமுவேல் 3:9; யோவான் 6:68

  ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. ஞானத்தின் பிறப்பிடமே இறைவா! மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் தன்னை இணைத்து தமது வாழ்வின் புதிய அனுபவத்தை காண விளையும் மாணவ மாணவிகள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும். வாழ்வில் கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் இன்றியமையாமையையும் எம் மாணவர்கள் உணரவும்; தரமான கல்வி வழியாக சிறந்த வேலைவாய்ப்பு கிடைக்க உம் ஆசிர் பொழியும்.
  2. குறித்தவற்றை குறித்த நேரத்தில் நிறைவேற்றும் அன்பு இறைவா! எம்மை கருவில் இருக்கும் போதே தேர்ந்தெடுத்து எம் வாழ்விற்கான திட்டத்தையும் வகுத்தவர் நீரே. நாங்கள் உலக இன்பங்களுக்கு அடிமையாகாமல் உமது திட்டப்படி வாழவும், வளரவும் எமக்கு துணையாக இருந்து எம்மைக் உமது சிறகுகளின் துணையோடு காக்க உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்பின் இறைவா! வாழ்வில் நிம்மதியும், குடும்பங்களில் அன்பும் நிலைக்காதா என்று ஏங்கி தவித்து உம் இல்லம் வந்திருக்கும் அனைவரும் உமது நிறைவான அருளால் சமாதானத்தையும் நீடித்த அன்பும் நிலைத்த ஒற்றுமையும் பெற்று என்றும் உம்மை புகழ நல்வழிகாட்ட மன்றாடுகின்றோம். 
  4. என்றென்றும் நன்மைதனங்களை நிலைக்க செய்யும் இறைவா! குடும்பமாக கூடி உம் முன் செபிக்க வந்திருக்கும் அனைவரின் மன ஏக்கங்கள், உள்ள தாகங்கள் அனைத்தையும் அறிபவர் நீரே. அவர்கள் உள்ள தேவைகளை பூர்த்தி செய்து என்றென்றும் உமது இரக்கத்தின் பாதையில் அவர்களை வழிநடத்த உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம். 
  5. பாதுகாப்பின் இறைவா! நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் இராணுவ வீரர்கள், அபாயகரமான தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் இன்னும் தங்கள் வாழ்வை பிறருக்காக அர்ப்பணிக்க துணியும் அனைத்து நல்மனம் படைத்தோரின் வாழ்வையும் செம்மைப்படுத்தி, அவர்கள் பாதுகாப்பின் வழியாக வீட்டின், சமூகத்தின், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உமது மனவுறுதியும் திடமும் தந்து காக்க உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா