கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

மூவொரு கடவுள் பெருவிழா (பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு)


 நிறம்: வெள்ளை 

வாசகங்கள்

முதல் வாசகம்: நீதிமொழிகள் 8: 22-31

இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 1-5

நற்செய்தி வாசகம்: யோவான் 16: 12-15

திருப்பலி முன்னுரை

  படைத்தல், காத்தல், வழிநடத்தல் ஆகிய மூன்று பணிகள் வழி நம்மை வழிநடத்தும் மூவொரு கடவுள் பெருவிழாவில் கலந்து அவர்களிடம் இருந்து நன்மைப் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

     மனிதர்கள் அனைவரையும் தன் திட்டத்திற்கு ஏற்ப உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை படைப்பவர் தந்தைக் கடவுள். தந்தையின் திட்டம் நிறைவேற, நமக்கும் தந்தைக்கும் இணைப்பு பாலமாக இருந்து காப்பவர் இறைமகன் இயேசு. நமக்கு உண்மையை அறிவித்து இறைபாதையில் நம்மை வழிநடத்துபவர் தூய ஆவியார். இவர்கள் மூவரும் இல்லையேல் மனித வாழ்வு வெறுமையாக இருக்கும். 

   உலகை உருவாக்கி அதனை தன் ஆற்றலுக்கு உட்படுத்த மனிதனை உருவாக்கியதிலிருந்து, தன் ஒரே மகனை நமக்காக கையளித்தது வரை இறை ஞானம் முக்கிய பங்காற்றியது. காலப்போக்கில் மனிதன் இறைவழியில் இருந்து விலகி உலக இன்பங்களுக்கு அடிமை ஆனான். உலக போக்குகளில் இருந்து மனிதனைக் காக்க இவ்வுலகிற்கு வந்தார் இறைமகன். 

    அவரே நமக்கும் கடவுளுக்கும் உறவு பாலமாக திகழ்கிறார். இவர்களிடம் இருந்து மூன்றாவதாக வருபவரே தூய ஆவி என்னும் துணையாளர். இவர் நமக்கு உண்மையை எடுத்துரைக்க வந்தவர். இறைமகன் இயேசுவிடம் இருந்து அனைத்து உண்மைகளையும் பெற்று நமக்கு அளிப்பவர். தனது கொடைகள், கனிகள், வரங்கள் மூலம் உண்மையின் பாதையில் வழிநடத்துபவர். 

  மூவரும் இணைந்து நம் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நம் கரம் பிடித்து இறைவழியில் பயணிக்க மூவொரு இறைவனின் வரம் வேண்டி நற்கருணை பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசக முன்னுரை

  உலகை உருவாக்கியதில் இறைவனின் ஞானம் அளப்பரிய பங்காற்றியுள்ளது. இத்தகைய இறை ஞானத்தைப் பற்றி முதல் வாசகமான நீதிமொழிகள் புத்தகம் அழகுற எடுத்துக் கூறுகிறது. இந்த ஞானம் இல்லையேல் மனிதன் உட்பட உலகின் உயிர்கள் அனைத்தும் உருவாகவும் இயங்கவும் சந்தர்ப்பம் அமைந்திருக்காது. இறைஞானத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் வாசகம் வழி ஞானம் பெற வாசகத்திற்கு உள்ளங்களை திறப்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை 

 நமக்கும் கடவுளுக்கும் இணைப்பு பாலமாய் இருப்பவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இந்த இணைப்பாளர் வழியாக என்றும் மாறாத பிணைப்பை நாம் பெற்றுள்ளோம் என்கிறார் தூய பவுல். மேலும் துன்பத்தை தாங்கும் மன வலிமையை தூய ஆவியாரிடம் இருந்து பெற்று கொண்டுள்ளோம் என்றும் கூறுகிறார். நமது எதிர்நோக்கு என்றும் ஏமாற்றம் தராது என்றுரைக்கும் வாசகத்தை கேட்கும் நாமும் மூவொரு இறைவன் வழியாக வாழ்வில் உயர நம்மை தயாரிப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திருவெளிப்பாடு 1:8

  இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. எங்களை அன்பில் வழிநடத்தும் திருஅவை உறுப்பினர்கள் அனைவரும் மூவொரு இறைவனின் அருள் பெற்று அன்பிலும், இணைந்த ஒன்றிப்பிலும் எமக்கு நல்வழி காட்ட, எமக்கு முன்மாதிரியாய் திகழ உமதருள் பொழிய மூவொரு கடவுள் வழியாக வேண்டுகிறோம். 
  2. புதிய கல்வியாண்டில் நுழையும் எம் மாணவ மாணவிகளை நிறைவாக ஆசீர்வதியும். அவர்கள் அனைவரும் ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து உம்மைப் போல் பெற்றோருக்கும் பெரியோருக்கும் கீழ்படிந்து வாழ மூவொரு கடவுள் வழியாக வேண்டுகிறோம்.
  3. மூவொரு கடவுளின் ஒன்றிப்பும் இணைந்த அர்ப்பணிப்பும் எம் வாழ்விலும், எம் குடும்பங்களிலும் நிலைபெறவும், உமது அருளின் வழியாக இணைந்து பயணிக்கும் குடும்பமாக எங்கள் குடும்பங்கள் மாற மூவொரு இறைவன் அருள் புரிய மன்றாடுகின்றோம். 
  4. உண்மை, உழைப்பு, அர்ப்பண வாழ்வு என்று அனைத்து துறைகளிலும் தங்களை இணைத்துக் கொண்டு பிறருக்காக பணிபுரியும் அனைவரையும் உம் பாதம் தருகின்றோம். அவர்கள் அனைவரும் மனத்திடமும் பெலனும் பெற்று வாழ்வில் முன்னேற்றம் காண மூவொரு இறைவன் வழியாக மன்றாடுகின்றோம். 
  5. சிறையிலும், போரிலும், பெரும் கொள்ளை நோய்களாலும் பாதிக்கப்பட்டு வாழ்வை இழந்து, புதுவாழ்வுக்காக ஏங்கும் மக்களை கண்ணோக்கிப் பாரும். அவர்கள் தங்கள் வாழ்வில் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று உமது வழியில் பயணிக்க மூவொரு இறைவன் வழியாக வேண்டுகிறோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா