கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

பாஸ்கா ஐந்தாம் வாரம்

 


நிறம் : வெள்ளை

வாசகங்கள்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 14: 22-27

இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 21: 1-5

நற்செய்தி வாசகம் : யோவான் 13: 31-33, 34-35

திருப்பலி முன்னுரை

 உள்ளங்களின் ஆழத்தில் இருந்து இறைவனைப் புகழ்ந்து அவர் அருள் பெற்று வாழ்வை இறைவழியில் அமைத்து செபிக்க இறையில்லம் தேடி வந்திருக்கும் உங்கள் அனைவரையும் இறைவனின் நாமத்தில் வரவேற்கிறேன். 

        அன்பு ஆற்றல் மிக்கது, பிரதிபலன் எதிர்பாராதது. தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்று கூறுகிறார் திருத்தூதர் பவுல். ஆனால் நண்பனை விட அதிகமாக இறைவன் நம்மை நேசித்தார் இதனால் தன் ஒரே மகனைக் கூட நமக்காக பலியிடவும் பாடுபட கையளிக்கவும் துணிந்தார். 

    இன்றைய நாம் வாழும் நவீன உலகில் அன்பிற்கும், உறவிற்கும் கூடி ஒன்றாக வாழும் பண்பிற்கும் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. சாதாரண கருவிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட மனிதர்களுக்கு கொடுக்க மறுக்கிறோம். தன் மீது தூய அன்பு வைத்திருப்போரை ஏளனமாக பார்த்து ஏமாற்றும் சமூகத்தில் வாழ்கிறோம். 

      நம் வாழ்வையும் இறையுறவையும் சீர்தூக்கி பார்த்து வாழ்வை சீரமைக்கும் தருவாயில் இருக்கிறோம். இறைவனின் தூய அன்பை பிறருக்கும் கொடுக்க முன்வருதல் வேண்டும். இறை அன்பின் உன்னதத்தை பிறரோடு பகிர்ந்து என்றும் அன்புடன் வாழ வரம் கேட்டு திருப்பலியில் இணைவோம். 

முதல் வாசக முன்னுரை

   இறையாட்சிக்கு உட்பட பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது முதல் வாசகமான திருத்தூதர் பணிகள் நூல். திருத்தூதர் பலரை ஒன்றிணைத்து, அவர்களை திடப்படுத்தி, உலகின் அனைத்து இன மக்களையும் திருச்சபை வசம் கூட்டிச்சேர்க்க இறைமகன் இயேசு அவர்களை ஆயத்தமாக்கி தன் அருளை அவர்களுக்கு அளித்தார். நமக்கு நேரிடும் துன்பங்களை நல்மனத்துடன் ஏற்று இறையாட்சிக்கு உட்பட்டு இறைவனில் ஒன்றிக்க வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

    யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு நூலின் இன்றைய வாசகப் பகுதி புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் பற்றி கூறுகிறது. இறைவன் உலகின் பாவங்களை போக்கி நம்மை மீட்டார். நாம் புதுவாழ்வு பெற்று வாழ புதிய வானகமும், மண்ணகமும் உருவாக்குகிறார் இறைவன். உலகின் அனைத்து மக்களையும் நேசிக்கும் இறைவன் நம் வாழ்வை புதியதாக்க இறைவார்தைபால் நம் உள்ளங்களை திறப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

  "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. பருவ காலங்களை நெறிப்படுத்தும் இறைவா! கால நிலை மாற்றத்தால் அதை எதிர்கொள்ள இயலாமல் தவிக்கும் மக்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருந்து அவர்கள் துயர் துடைக்கவும், இயற்கை நீர் உறையும் இடம் என்பதை உணர்ந்து இயற்கையையும் அது சார்ந்த வளங்கள் அனைத்தையும் நாங்கள் பேணிக்காக்க நல்வரம் தாரும். 
  2. யுகங்களுக்கெல்லாம் தலைவரே எம் இறைவா! வீணான பொழுதுபோக்கு அம்சங்களில் வாழ்க்கையை செலுத்தி நேரத்தை வீணாக்காமல் அந்நேரத்தை உம்மை தெரிந்து கொள்ள செலவிடவும், உமது மதிப்பீடுகளை பிறரிடம் எடுத்து உரைத்து உமது இறையாட்சியின் மறைபரப்பு பணியில் எம்மை இணைத்து வாழ வரமருளும். 
  3. மருத்துவர்களுக்கெல்லாம் உயர்ந்த மருத்துவரே எம் இறைவா! நோயில் வாடும் முதியவர்கள் ஆதரவற்ற நோயாளிகள், வயதில் மூத்த குடிமக்கள் ஆகிய அனைவருக்கும் நீரே உற்ற துணையாக இருந்து அவர்களை தேற்றி அவர்கள் உடனிருந்து வழிநடத்த நல்வரம் தாரும் ஆண்டவரே. 
  4. குடும்பங்களுக்கு வழிகாட்டியாம் அன்பு இறைவா! எம் குடும்பங்களில் சமாதானம் நீடிக்கவும்; குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, குடும்பத்தில் வாழும் பிறரை ஏற்றுக்கொண்டு என்றும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மனிதநேயத்துடன் வாழ வரம் அருளும் இறைவா. 
  5. அனைவருக்கும் உற்ற துணையாம் அன்பு தெய்வமே இறைவா! சமூகத்தில் வாழும் ஏழை எளியோர், ஆதரவற்றோர், கைம்பெண்கள் என பலதரப்பட்ட கைவிடப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீரே துணையாக இருந்து அவர்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உமது துணையுடன் முன்னேற்றம் கண்டு என்றும் மகிழ்ந்திருக்க உமது அருளைப் பொழிந்தருளும். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா