பாஸ்கா நான்காம் வாரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : வெள்ளை
வாசகங்கள்
முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 14, 43-52
இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 7: 9, 14 - 17
நற்செய்தி வாசகம் : யோவான் 10: 27 - 30
திருப்பலி முன்னுரை
இணைந்திருப்பதே வாழ்வின் முதிர்ச்சி, இணைந்திருப்பதே வாழ்வில் மகிழ்ச்சி என்றும் இறைவனோடு இணைந்து வாழ இறை ஆசீர் பெற இறையில்லம் நாடி வந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.
இணைந்த வாழ்வு என்பது என்றும் பிரியாத வாழ்வு. பிறரை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. இணைந்த பயணத்தின் வழியே இலக்கை அடைவது. தந்தையும் இயேசுவும் ஒன்றாய் இருப்பது போல நாமும் சமூகத்தின் பிற மக்களோடு இணைந்து வாழ வேண்டும். இதையே இறைமகன் இயேசுவும் விரும்புகிறார்.
இதனாலேயே திருத்தூதர்களை ஏற்படுத்தி அவர்களை பிற இனத்தாருக்கு நற்செய்தி பணியாற்ற பணிக்கிறார். மனம் மாறி நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு இறை பாதம் சரணாக வேண்டும். புதுவாழ்வு வாழ நற்செய்தி துணை புரியும் என்ற உண்மை புலப்படும். தினமும் இறை அன்பில் புது உயர்வு காண உள்ளம் ஏங்கும்.
உறவின் மூலம் நம்மை உருவாக்கிய இறைவனின் வழி நின்று தூய வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம். என்றென்றும் இரக்கத்துடன் புதுவாழ்வு பெற்று இணைந்து பயணிக்கும் வரம் கேட்டு திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
உலக மக்கள் அனைவரும் மீட்படையும் பொருட்டும் நற்செய்தியை பிற இன மக்களும் கேட்டு மீட்பைப் பெற திருத்தூதர்கள் இறைப்பணி செய்தனர். இந்த நிகழ்வை திருத்தூதர் பணிகள் நூல் நமக்கு எடுத்தியம்புகிறது. மக்கள் அனைவரின் மீட்பின் ஒளியாக கடவுள் தன் ஒரே மகனை நமக்களித்தார். இதை வாயார அறிக்கையிடும் நாம் அவரின் உரிமைச் சொத்தான மக்களாக வாழ, இறை உறவில் என்றும் நிலைபெற வாசகத்தை வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இம்மையின் கண்ணீரை மறுமையில் போக்கும் ஆற்றல் கொண்டவை இறைவனின் வார்த்தைகள் என்பதை திருவெளிப்பாடு நூல் அழகுற எடுத்து உரைக்கிறது. உலக இன்பங்களை விடுத்து என்றும் இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ்வோர் எல்லாம் வல்ல இறைவனுடன் மறுமையில் வீற்றிருப்பர் என்கிறது இவ்வாசகம். ஆகவே வாசகத்தை கேட்கும் நாமும் இறைவுறவில் நிலைபெற நம்மை தயாரிப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- திருஅவையின் வழியே உம் திருச்சபையை எமக்கு வழங்கிய இறைவா, நீர் உருவாக்கிய திருஅவை உமது இறையாட்சியின் மதிப்பீடுகளை மக்களிடையே அறிவிக்கவும், உலக மக்கள் அனைவரும் உம்மை தெரிந்து கொள்ள ஏற்ற வகையில் செயல்பட அவர்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்க உம்மை மன்றாடுகின்றோம்.
- திருக்குடும்பத்தின் முன்மாதிரியை மையமாக வைத்து எம் குடும்பங்கள் உமது அருளில் வாழவும், குடும்ப சமாதானம், அமைதி ஆகியவற்றை பெற்று உமது உடனிருப்பின் வழியே வாழ்வை அமைத்துக் கொள்ள வரம் தாரும் ஆண்டவரே.
- தகவல் தொழில்நுட்பத்தின் தேவையை எமக்கு உணர்த்திய இறைவா! உம்மை மறந்து இன்று தொழில்நுட்பத்தின் வழியே வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அதன் மாயையை உணர்த்தி அனைவரும் உம்மை துதிக்கவும், உமது வார்த்தைகள் வழி வாழ வரமருளும்.
- படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் தங்கள் கடமை உணர்ந்து நன்றாக படிக்கவும், தேர்வுகளை எதிர்நோக்கும் அனைவருக்கும் நீரே உற்ற துணையாக இருந்து அவர்களுக்கு குறித்ததை நீரே நிறைவேற்ற உமது அருள் தந்து காக்க உம்மை வேண்டுகிறேன்.
- அனைத்தையும் பார்க்கின்றவரான இறைவா நீர் எமக்களித்த அனைத்து திறமைகள், ஆற்றல்கள், பண்புகள் அனைத்தையும் பிறருக்காகவும் பிறரின் முன்னேற்றத்திற்காகவும் உபயோகிக்கவும், பிறரின் வளர்ச்சி வழியாக சமூக வளர்ச்சி ஏற்படுத்தும் வரம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen 🙏
பதிலளிநீக்கு