பாஸ்கா ஞாயிறு (Easter Sunday)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : வெள்ளை
வாசகங்கள்
முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 10: 34, 37 - 43
இரண்டாம் வாசகம் : கொலோசையர் 3: 1 - 4
நற்செய்தி வாசகம் : யோவான் 20: 1 - 9
உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்னாள், பொன்னாள். ஆம்! இது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாள்.
பழைய பாஸ்காவில் செம்மறி ஆட்டின் இரத்தம் சிந்தப்படும். புதிய பாஸ்காவில் செம்மறியான நம் இறைவன் நமக்காக இரத்தம் சிந்தியதை நினைவு கூர்கிறோம். நமது பாவங்களுக்காக தன் ஒரே மகனையும் நமக்காக கையளித்தார் தந்தைக் கடவுள். இது அவர் நம்மீது வைத்துள்ள அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகிறது.
இயேசுவின் வாழ்வு மீட்பை சார்ந்தே அமைகிறது. அங்ஙனமே அவரது குரலும் ஒலிக்கின்றது. மீட்பு வரலாற்றின் பல அத்தியாயங்களை நமக்காக வாழ்ந்தார் நம் இறைவன். அவரது வாழ்வு என்றும் பிறரை வாழ வைப்பதிலே தான் அடங்கி இருக்கிறது.
அன்றும் இன்றும் என்றும் மக்கள் மீட்புக்காக குரல் கொடுக்கும் நம் மீட்பரின் உயிர்ப்பு நம் வாழ்வை மாற்றியமைக்கும். அவர் நமக்களித்த இம்மீட்பை நாமும் பிறருக்கு முழுமனதுடன் வழங்க முன்வருதல் வேண்டும். ஏனெனில் இறைமீட்பு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.
ஒன்றே செய்வோம், நன்றே செய்வோம், அதுவும் இன்றே செய்வோம்! பிறரை நல்வழிப்படுத்த, பிறருக்கு உதவிக்கரம் நீட்ட, என்றென்றும் உண்மையுடன் உறவுகளைப் பேண, பிறர் மீட்படைய நாமும் காரணமாக வழிபாட்டில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவருக்கு சான்று பகருங்கள் ஏனெனில் அவர் நல்லவர். தூய ஆவியின் வல்லமை கிறிஸ்து இயேசுவின் மேல் இருந்ததால் அவர் சென்ற இடங்களில் எல்லாம் நன்மையை செய்தார். என்றுமுள ஆண்டவர் இயேசுவே வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராக கடவுளால் குறிக்கப்பட்டவர். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் பாவமன்னிப்பு பெறுவது உறுதி. இதற்கு சான்றே அவரது சீடர்கள் என்பதை உரைக்கும் திருத்தூதர் பணிகள் நூலின் வார்த்தைகளுக்கு உள்ளங்களைத் திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் கிறிஸ்து இயேசுவுடன் உயிர் பெற்றுள்ளோம் ஆதலால் விண்ணுலக வாழ்வைக் குறித்து எண்ண வேண்டும் என்கிறார் திருத்தூதர் பவுல். இவ்வுலக வாழ்வைப் பற்றி எண்ணாமல் கிறிஸ்து இயேசுவுடன் இணைந்த விண்ணக வாழ்வைக் குறித்த எண்ணம் தேவை. ஏனென்றால் கிறிஸ்துவே நமக்கு வாழ்வு தருபவர். அவரோடு மாட்சி பொருந்தியவராய் தோன்ற வாசகத்தை வாழ்வாக்குவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 கொரிந்தியர் 5: 7-8
அல்லேலூயா, அல்லேலூயா நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவை கொண்டாடுவோமாக. அல்லேலூயா!
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- திருஅவை உறுப்பினர்களான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் துறவரத்தார் அனைவரும் இணைந்து உம் திருவுடல் ஆகிய திருச்சபையை கட்டி எழுப்பவும்; அதற்கு தேவையான உடல், உள நலத்தோடு நிறைந்த ஞானத்தையும் பெற்று உம் பாதையில் நடக்க வரமருளும்.
- போரினால் பாதிக்கப்பட்ட மக்களை கண்ணோக்கிப் பாரும் ஆண்டவரே, அவர்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெற்று, தங்கள் வாழ்வை அன்பிலும் மகிழ்ச்சியிலும் வழிநடத்தவும் என்றும் அமைதியான வாழ்க்கை வாழவும், வாழ்வாதாரம் வழியே புனர்வாழ்வு பெற்று வாழ அருள்புரியும்.
- பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு அடிப்படைத் தேவைகள் இழந்த தவிக்கும் மக்கள் சீரான வாழ்வு பெறவும், பொருளாதார சமநிலைப் பெற சரியான திட்டமிடலும், போதிய உதவியும் பெற்று புனர்வாழ்வு பெற உம் வழிகாட்டுதல் வழி உதவ வேண்டுகிறோம்.
- எம் இளைஞர்கள் அனைவரும் வீணான பொழுதுபோக்குகளில் தங்கள் நேரங்களை செலவிடாமல் அவர்கள் கடமைகளை உணர்ந்து என்றும் உண்மையுடன் தத்தமது செயல்களை சரிவர செய்ய உமது அருளுதவி கொடுத்து வழிநடத்த மன்றாடுகின்றோம்.
- எமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த இயற்கையை நாங்கள் பாதுகாக்கவும்; இயற்கை வளங்களை சீர்குலைக்கும் எல்லாப் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்து என்றும் இயற்கையுடன் இணைந்து வாழ வரமருள வேண்டுகிறேன்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen 🙏
பதிலளிநீக்கு