பாஸ்கா மூன்றாம் வாரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : வெள்ளை
வாசகங்கள்
முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 5 : 27 - 32, 40 - 41
இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 5 : 11 - 14
நற்செய்தி வாசகம் : யோவான் 21 : 1 - 19
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் அனைத்தையும் படைத்தவர் அவரே! மானிடக்குலத்தின் மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா!
திருப்பலி முன்னுரை
பாஸ்கா மூன்றாம் வாரத்தோடு இணைந்து, உழைப்பின் உறுதுணையாம் உழைப்போரின் பாதுகாவலாம் புனித சூசையப்பரின் விழாவைக் கொண்டாட இருக்கிறோம். இந்த பொன்னான நாளில் நற்கருணை கொண்டாட்டத்தில் தன்னை இணைத்து இறையாசீர் பெற கூடியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பல்லாயிரம் மக்கள் உழைப்பின் மூலம் தங்களை முன்னிருத்தி வாழும் இவ்வுலகில் பலரின் பணிகள் மாறுபடினும் அனைவரின் உழைப்பின் நோக்கமும் ஒன்றுதான். மாந்தர்கள் எல்லோரும் தத்தம் பணிகள் மூலம் வாழ்வின் அடுத்த படிநிலையை நோக்கி செல்கின்றனர். இத்தகைய இறையாட்சி பணி செய்யவே இறைமகன் இயேசுவும் இவ்வுலகிற்கு வந்தார். இதிலே பணி குருத்துவத்தின் மையம் அடங்கியுள்ளது.
தியாக வாழ்வும் உழைப்பை சார்ந்தே அமைகின்றது. இத்தியாகம் உழைக்கும் மக்களை அவர்கள் இலக்கை அடையவும், அவர்களை சார்ந்தோரை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லவும் உந்து சக்தியாக செயல்படுகிறது. இத்தியாக வாழ்விற்கு முன்னோடி நம் இயேசு கிறிஸ்துவே. அவரின் தியாக வாழ்வு செம்மறியாகிய அவரின் இரத்தத்தை நமக்காக கையளிக்க வைத்தது; நமது மீட்புக்கு விலையானது.
இன்று நமக்காக உழைக்கும் அனைத்து நல்லுள்ளங்களையும் எண்ணிப்பார்த்து, அவர்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவேண்டல் செய்வோம். உழைப்பின் மேன்மையை உணர்ந்து, நமக்காக பிறர் செய்யும் தியாக வாழ்வை எண்ணி, இறைவழியில் நாமும் பிறருக்கு தியாக சுடர்களாக மிளிர வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
திருத்தூதர்கள் இறைவன் மீது கொண்ட பற்றினால் நற்செய்தி பணியாற்றி மக்களை இறைவன்பால் சேர்த்தனர். இயேசு கிறிஸ்துவே அனைத்திற்கும் மேலானவர் என்பதை பிறருக்கு போதித்தனர். இதனுடன் மனிதர்களுக்கு கீழ்படிவதை விட கடவுளுக்கே கீழ்படிய வேண்டும் என்ற உயரிய உண்மையும் திருத்தூதர் பணிகள் நூல் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. நம் செயல் வழி அனைத்திற்கும் மேலான இறைவனுக்கு கீழ்படிந்து உயர்ந்த வாழ்வு வாழ வாசகத்தைக் கவனமுடன் வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
பின்னால் நடக்கவிருப்பதையும் ஆண்டவரின் வருகையின் போது நிகழவிருப்பதையும் முன்கூட்டியே எடுத்துரைக்கிறார் திருத்தூதர் யோவான். நமக்காக உயிர் தியாகம் செய்த செம்மறியாம் இயேசுவின் புனிதம், தியாகம் என்றென்றும் புகழப்படும் என்று கூறுகிறது இவ்வாசகம். தந்தையின் மாட்சியும், இயேசுவின் தியாகமும் நம் வாழ்வை நெறிப்படுத்தும். தியாக வாழ்வே உண்மை கிறித்தவம் என்பதை எடுத்துரைக்கும் வாசக வரிகளுக்கு உள்ளங்களை திறப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- அனைத்தையும் காண்கின்றவரே இறைவா! எங்கள் வாழ்வை உம் பாதம் தருகின்றோம். எம் வாழ்வில் சந்திக்கும் அனைத்து சுக, துக்கங்களை அப்படியே ஏற்று உமக்காக வாழவும், பிறர் உழைப்பின் தியாகத்தை அவமதிக்காமல், பிறரின் வீழ்ச்சிக்கு காரணமாகாமல் பிறர் வளர்ச்சிக்கு துணை நிற்க அருள் தாரும் ஆண்டவரே.
- அமைதியின் இருப்பிடமே எம் இறைவா! போர்கள், எல்லை பயங்கரவாத பிரச்சனைகள், நோய் தொற்றுகள் போன்ற பலவித இன்னல்களில் இருந்து எம்மை பாதுகாத்து, உமது அமைதியை எங்கும் பரப்பிட அருள்புரியும்.
- அறிவின் ஊற்றே எம் இறைவா! உமது அன்பை மறந்து உம்மைப் பற்றி நினைக்காமல், செபிக்காமல் தொலைக்காட்சியில் வீணாக பொழுதை கழிக்காமல் உமது உடனிருப்பை உணர்ந்து என்றும் இறையாட்சிப்படி நடக்க உமதருள் தாரும்.
- மகிழ்ச்சியின் பிறப்பிடமே இறைவா! எங்கள் உழைப்பை ஆசீர்வதியும், நாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் உமக்காக செய்யவும், எம் செயல்களில் உம்மை கண்டு உமக்கு பணிபுரியும் அருள் புரியும் ஆண்டவரே.
- உறவுகளின் உணர்வே இறைவா! எம் பெற்றோர், பெரியோர், உறவினர்கள் அனைவரையும் மதித்து நடக்கவும், பிற மனிதரிடையே உம் உடனிருப்பை விதைக்கவும், அனைவரிடமும் பரிவு கொண்டு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

🙏 amen
பதிலளிநீக்கு