திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
குருத்தோலைப் பவனி
முன்னுரை
லூக்கா 19: 28 - 40
அனைவரும் இறைவனிடம் நெருக்கம் கொண்டு இறை மனித உறவில் வளர நமக்கு அருளப்பட்டதே புனித வாரம். மனிதன் புனிதனாகவும், புனிதர்கள் இறைவனில் இணையவும் நாம் நினைவு கூறுவது இயேசுவின் திருப்பாடுகள்.
ஆண்டவரின் அரசராம் உலக மக்கள் அனைவரின் மீட்பராம் நம் இயேசுவின் ஒலிவ பயணத்தை நினைவு கூற இருக்கின்றோம். அன்று மக்கள் அனைவரும் ஆண்டவர் வழி தாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் வழிநெடுக தம் கைகளில் ஒலிவக் கிளைகளை ஏந்தி அவரைப் புகழ்ந்தனர்.
இன்று அதன் நினைவாக கைகளில் குருத்து ஓலைகளை ஏந்திய வண்ணம் பவணி செல்ல தயாராவோம். குருவானவர் குருத்து ஓலைகளை அர்ச்சிக்க, அவரைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து நாம் பெற்ற நன்மைகளுக்காக இறைவனைப் போற்றி ஓசான்னா கீதம் இசைப்போம். பவணியில் பங்கேற்போம்.
நிறம் : சிவப்பு
வாசகங்கள்
முதல் வாசகம் : எசாயா 50: 4 - 7
இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 2: 6 - 11
நற்செய்தி வாசகம் : லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 22: 14 - 23: 56
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் திருப்பாடுகளை தியானிக்க இறையில்லத்தில் இணைந்து செபிக்க வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள்.
அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார். உலகின் பல திசைகளில் வாழும் மக்களை அன்றாடம் பலரை முன்சார்பு எண்ணங்களால் தீர்ப்பிடுகின்றனர். தீர்ப்பிடுபவர்கள் தங்கள் குற்றங்களைக் காண மறுக்கின்றனர். ஆனால், நம் ஆண்டவர் இயேசு நமக்காக தீர்ப்புக்கு உள்ளானார்.
நம் பாவங்களுக்காக உயிர் தியாகம் செய்த நம் ஆண்டவரை இன்று நாம் நினைவு கூறுகையில், நாம் பிறரை தீர்ப்பிட்ட தருணங்களை எண்ணி அதை திருத்த முயல்வோம். இறைபாடுகள் வழி நம் வாழ்வை இறைவனில் அர்ப்பணித்து தெய்வீக வாழ்வில் இணைவோம்.
என்றும் வாழும் இறைவன் நம்மை பாதுகாத்து என்றென்றும் உடனிருந்து வழிநடத்த இறைவுதவி நாடுவோம். பிறரை தீர்ப்பிடாமல் என்றும் இறைவழியில் வாழ இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
நலிந்தோரை ஊக்குவிக்கும் பொருட்டு கற்றோரின் நாவை, ஆண்டவர் எனக்கு அளித்துள்ளார். எச்சூழலிலும் பொறுமை இழக்காத மனம், நிந்தனை செய்வோரை பழிவாங்கா குணம் இவை ஆண்டவரின் கொடைகள். ஆண்டவர் மேல் மகத்தான நம்பிக்கை வைப்போர் எவரும் இழிநிலை அடைவது இல்லை என்கிறார் எசாயா இறைவாக்கினர். அவர் சொற்படி இறை சித்தத்தை ஏற்று வாழ நம்மை முழுவதும் தயாரிப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுள் வடிவில் இருக்க வேண்டிய இறைவன் நமக்காக அனைத்தையும் துறந்து அடிமையின் வாழ்வை ஏற்றார். தம்மை தாழ்த்தி, தந்தையின் சொற்படி, தம்மை வெறுமையாக்கி, சிலுவை மரணம் ஏற்றார் என்கிறார் திருத்தூதர் பவுல். தம் தந்தைக்கு கீழ்படிந்து வாழ்ந்ததால் அவர் அனைவருக்கும் மேலாகத் திகழ்கிறார். இயைசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட நம் உள்ளங்களை இறைவார்த்தைப் பக்கம் திருப்புவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
பிலிப்பியர் 2: 8 - 9
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- இயேசுவின் பாடுகளைத் தியானிக்கும் நாங்கள், எங்கள் வாழ்வில் எமக்காக உழைக்கும் எம் பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் எம்மை வழிநடத்தும் யாவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழவும்; தன்னலம் பாராது உழைக்கும் அவர்கள் என்றும் உம் இறை இரக்கத்தில் வளர வரமருளும்.
- பல்வேறு தொழில் முனையும் மக்களை உம் பாதம் தருகின்றோம். அவர்கள் பணி சிறக்கவும், தங்கள் பணியில் உம் மதிப்பீடுகளின்படி செயல்பட்டு என்றும் உண்மையுடன் வாழ அருள்புரியும் இறைவா.
- எங்கள் குடும்பங்களில் அன்பும், அமைதியும் நிலைக்கவும்; சமாதானம் பெருகி, இறைவுறவில் நிலைத்து என்றும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியான வாழ்வு வாழ அருள் தாரும்.
- உறவுகளில் உண்மையும் அன்பும் நிலைபெறவும்; எங்கள் கடமை உணர்ந்து பிறர் வாழ எம்மை அர்ப்பணிக்கவும்; திறமைகள் ஆற்றல்களை பிறருக்கு உபயோகமாக மாற்ற உமதருள் தாரும்.
- பிறரை தீர்ப்பிடாமல் எங்களைப் போல சக மனிதர்களையும் பாவித்து சகோதர அன்புடனும் மனித நேயத்துடனும் வாழவும்; நீர் எம் குற்றங்களை மன்னித்தது போல பிறர் குற்றம் மன்னிக்கும் மனதை எமக்கு அருளும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen 🙏
பதிலளிநீக்கு