தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாசகங்கள்
முதல் வாசகம் : எசாயா 43: 16 - 21
இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 3: 8 - 14
நற்செய்தி வாசகம் : யோவான் 8: 1 - 11
நிறம் : ஊதா
திருப்பலி முன்னுரை
தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
'மடியில் கணம் இல்லையேல் வழியில் பயம் இல்லை' ஆம் அன்பிற்கினியோரே, நாம் பல சமயங்களில் நம்முடைய கடந்த கால வாழ்வை எண்ணி பரிதவிக்கின்றோம். வாழ்வு ஒவ்வொரு சந்திப்பிலும் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அவற்றை அனுபவங்களாக மாற்றி கடந்து செல்வதே சாதூர்யம்.
முந்தைய பாவ வாழ்வை எண்ணியெண்ணி தற்போதைய இறைவாழ்வை மறந்தோர் பலர் உளர். இவர்களைப் போல் அல்லாது இயேசுவை துணையாகக் கொண்டு வாழப்பழக வேண்டும்.
நம் கண்களில் இருக்கும் தூசியைப் பாராமல் பிறர் குற்றங்களை மட்டும் பார்ப்பதும், பிறரை தீர்ப்பிடுவதும் தவறு என்பதை உணர்வோம். பிறரை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றி அமைப்போம். நம்மை மீட்ட இறைவனிடம் வாழ்வை ஒப்படைப்போம்.
நம்மை தேர்ந்தெடுத்த இறைவன் நமக்காக அனைத்தையும் செய்ய வல்லவர் என்பதை உணர்ந்தோராய் வழிபாட்டில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை
பழையன கழிதல் வேண்டும், முற்கால பாவ சிந்தனைகளை மறந்து கடவுள் வழங்கவிருக்கும் புதுச்செயல்களை பார்க்க வேண்டும் என்கிறார் எசாயா இறைவாக்கினர். கடவுள் புகழைப்பாட அவர் குறித்த மக்களினமாக நாம் மாற அழைப்பு விடுக்கிறார் இறைவாக்கினர். நம் பாவ வாழ்வை மறந்து இறைவன் காட்டும் புதிய பாதை வழியாக பயணிக்க நம்மை தயாரிப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என்கிறார் திருத்தூதர் பவுல். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள பிறவற்றை இழப்பதும்; கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ்வதும் இன்றியமையாதது என்கிறார் தூய பவுல். கடந்த கால வாழ்வை மறந்து, நிகழ்காலத்தைக் கண்முன் கொண்டு இலக்கை நோக்கி தொடர்ந்து ஓட வேண்டும். இயேசுவின் அழைப்பாகிய பரிசைப் பெற இடையூறுகளைத் தாண்டி, பற்றுகளைத் துறந்து பயணிப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவான் 2: 12 - 13
இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- எங்கள் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து இயேசுவின் வழியில் எம் வாழ்வை அமைக்கவும்; உறவுகளில் உண்மையுடன் செயல்பட்டு நன்முறையில் இறைபாதையில் பயணிக்க வரமருளும்.
- சாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவரும் ஒன்று என உணர்ந்து வாழவும்; நாங்கள் எங்களை நேசிப்பது போல பிறரையும் நேசித்து பிறர் வாழ்வு வளம்பெற உழைக்க அருள் தாரும்.
- வேலையின்மை, வறுமை, ஏழ்மை கடன்தொல்லை போன்ற சூழலில் சிக்குண்டு அல்லல்படும் உம் மக்களைக் கண்ணோக்கிப் பாரும். அவர்கள் அனைவரும் தம் வாழ்வில் காணப்படும் அனைத்து சிக்கல்களிலிருந்து விடுபட்டு புதுவாழ்வு காண வரமருளும்.
- உடல் உள நோய்கள், முதுமையால் ஏற்படும் தனிமை இவற்றால் பாதிக்கப்படும் மக்கள் விரைவில் நலமடைய உம் அருள் தாரும். என்றும் வாழும் இறைவனின் அருளால் அவர்கள் புதுவாழ்வு வாழ அருள்புரியும்.
- தன்னலம் கொண்ட மனிதர்கள் வாழும் உலகில் உம்மை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த இறைவா, உம் வார்த்தைகளின்படி பிறர் நலம் பேணும் மனிதர்களாக வாழவும், பிறரை இறைவழியில் பராமரிக்க வரமருள வேண்டுகிறேன்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Amen
பதிலளிநீக்கு