ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாசகங்கள்
முதல் வாசகம் : சீராக் 27: 4-7
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 15: 54-58
நற்செய்தி வாசகம் : லூக்கா 6: 39-45
நிறம் : பச்சை
திருப்பலி முன்னுரை
இறையில்லம் தேடி ஆசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும். ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு திருப்பலியை கலந்து இறைவேண்டல் புரிய உள்ளங்களைத் தயாரிப்போம்.
வாழ்வின் பரிணாமங்கள் பற்பல. அனைத்து நிலையிலும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்விலும் உள்ளத்தில் உண்மையாகவும் செயல்களில் நேர்மையாகவும் விளங்குவது இன்றியமையாதது.
இன்றைய நம் சமூகத்தில் தங்கள் குற்றங்களைப் பாராமல் அடுத்திருப்போரைத் தீர்ப்பிடும் மனங்கள் ஏராளம். நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை; கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை என்பதை இன்றைய வழிபாட்டின் வழியாக உணர்வோம்.
'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' ஆகவே உள்ளமாகிய கருவூலத்தில் நல்லவற்றை நிரப்புவோம். நம் செயல்கள் மற்றும் பேச்சுக்கள் வழி நல்லதை எண்ணி, நல்லவற்றை பேசி பிறருக்கு முன்மாதிரியாக வாழ வழிநடத்த வரம் கேட்டு திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆள் பாதி ஆடை பாதி அவ்வண்ணமே மனித எண்ணங்கள் பாதி செயல்கள் பாதி. மனிதரின் பேச்சு, உரையாடல், சொல் ஆகியவை எவ்வாறு இருத்தல் வேண்டும் எவ்வாறு அமைதல் கூடாது என்பதை சீராக்கின் ஞான நூல் விவரிக்கிறது. எண்ணங்கள் தூய்மையானால் செயல்கள் தூய்மையாகும், வாசகம் வழி மனிதர்களை அறிந்து கொள்ள வாசகத்தை வாழ்வாக்குவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இயேசு கிறிஸ்துவின் வழியாக ஆண்டவர் நமக்கு வெற்றி அருள்வார். ஆண்டவருக்காக செலவிடும் நம் உழைப்பு என்றும் வீண்போகாது. ஆகவே நம் திறமைகள் அனைத்தையும் ஆண்டவருக்காக செலவிட வேண்டும். மறைநூல் வாக்கு எப்போது நிறைவேறும் என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கு உள்ளங்களைத் திறப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- அன்பாகி, அருளாகி, அனைத்தையும் உருவாக்கிய இறைவா! திருஅவை மற்றும் நீர் தேர்ந்தெடுத்த அதன் உறுப்பினர்கள் அனைவரும் உம்முடைய வழிகளை பின்பற்றி அனைவரும் சமம் என்பதை உணர்ந்து வாழ வரமருளும். திருஅவை காலம்தோறும் நிலைபெற்று உம் நாமம் உரைத்திட அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்.
- தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அன்பு இறைவா! எம் நாட்டு தலைவர்கள், அரசு அதிகாரிகளை வழிநடத்தும். அவர்கள் தங்கள் பணிகளை உணர்ந்து மனிதம் காக்கவும், பிறருக்கு உதவி செய்து, தங்கள் பணியின் நோக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- ஒற்றுமையின் நாயகனே இறைவா! எம் குடும்பங்களில் உம்மை நாங்கள் பிரதிபலிக்கவும்; நாங்கள் செல்லும் இடங்களில், பணிபுரியும் மையங்களில் உம் மதிப்பீடுகளை விதைக்கவும் வரமருளும். உள்ளத்தின் நிறைவான நல்ல வார்த்தைகளை பேச எம்மை வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அமைதியின் ஊற்றே எம் இறைவா! போரினால் வாழ்வை இழந்து, அடிப்படை உரிமைகளை இழந்து தவிக்கும் உம் மக்களைக் கண்ணோக்கிப் பாரும்; விரைவில் போர் நிறுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவும், அன்பு, அமைதி, ஒற்றுமையோடு மக்கள் இணைந்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Amen....
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்கு